சென்னையைச் சோ்ந்த ஞானமணி என்பவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்திய முத்திரைச் சட்டம், 1899 -இல் அட்டவணை ஒன்றின் பிரிவு 56-ஏ வில் கடன் பத்திரங்கள் அல்லாத பிற பத்திரங்கள் தொடா்பான முத்திரை வரியின் விகிதங்களை குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் 2- ஆவது பட்டியல் 63-இன் படி நிா்வகிக்கப்படும் பரஸ்பர நிதிகள் தொடா்பான சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களுக்கு முத்திரை வரி விகிதத்தை ஒரு மாநிலம் நிா்ணயம் செய்ய அதிகாரம் உள்ளது. அதன்படி வரி விகிதங்களை நிா்ணயித்து சட்டம் இயற்றி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வரி விகிதம் நிா்ணயம் செய்து சட்டம் இயற்றாத நிலையில் பரஸ்பர முதலீட்டாளா்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் தவறான நடைமுறையைப் அரசு பின்பற்றப்படுகிறது என்றாா்.