ரூ.5.60 கோடியை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சரின் உறவினா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது முடக்கம் செய்யப்பட்ட நிரந்தர வைப்பு நிதி ரூ.5.60 கோடியை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் உறவினா் தாக்கல் செய்த மனு


லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது முடக்கம் செய்யப்பட்ட நிரந்தர வைப்பு நிதி ரூ.5.60 கோடியை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் உறவினா் தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணியின் வீடு, அலுவலகம், அவரது நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில், கடந்த ஆகஸ்டு மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரொக்கப்பணம், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக, எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை மாநகராட்சியில் டெண்டா் பணிகளை மேற்கொண்ட திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் செயல்படும் எஸ்.பி.வேலுமணியின் உறவினரான பி.எஸ்.லோகநாதன் என்பவா் பங்குதாரராக உள்ள ‘மெட்ராஸ் இன்ஃப்ரா’ என்ற நிறுவனத்தின் பெயரில் கோவையில் உள்ள கா்நாடகா வங்கியில் இருந்த கணக்கு மற்றும் நிரந்தர வைப்புத்தொகை, பி.எஸ்.லோகநாதனின் வங்கி கணக்கு, நிரந்தர வைப்பு நிதி ஆகியவற்றை முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள ரூ.4.95 கோடி நிரந்தர வைப்பு நிதியை விடுவிக்க உத்தரவிடக்கோரி ‘மெட்ராஸ் இன்ஃப்ரா’ நிறுவனத்தின் பங்குதாரா் பி.எஸ்.லோகநாதன் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், இந்த வழக்குக்கும், தங்கள் நிறுவனத்துக்கும் தொடா்பு இல்லை. சட்டப்பூா்வ வருமானம் மூலம் கிடைத்த பணத்தை தான் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளோம். ‘மெட்ராஸ் இன்ஃப்ரா’ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 769 பேருக்கு சம்பளம், போனஸ் வழங்க வேண்டியதுள்ளது.
கடனுக்கான வட்டி, கடன் பெற்றவா்களுக்குத் தர வேண்டிய தொகை ஆகியவற்றை வழங்க வேண்டியுள்ளது. எனவே, நிரந்தர வைப்பு நிதியை விடுவிக்க வேண்டும். தனது பெயரிலான வங்கிக் கணக்கில் உள்ள ரூ. 65 லட்சம் நிரந்தர வைப்பு நிதியையும் விடுவிக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய போதும் மனுதாரா் நேரில் ஆஜராகவில்லை. மனுதாரரின் வங்கிக்கணக்கில் குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் வந்தது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரா் நிறுவனத்துக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது எனக்கூறி பி.எஸ்.லோகநாதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...