பள்ளி செல்லத் தயாராகும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு உத்தரவைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் தயார்படுத்தி வருகிறார். 
பள்ளி செல்லத் தயாராகும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்!
Published on
Updated on
2 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு உத்தரவைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் தயார்படுத்தி வருகிறார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மாதம் திறக்க உள்ள பள்ளிகளுக்கு செல்ல மாணவ- மாணவிகளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தயார் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கரோனா எனும் கொடிய நோய் நாடு முழுவதும் பரவியதையடுத்து நாட்டிற்குள் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துத் தடை, மாநிலங்களுக்கு உள்ளே தடை, மாவட்டங்களுக்கு உள்ளே தடை என பல்வேறு தடைகள் மத்திய-மாநில அரசுகளால் விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் ஊரடங்கு என்ற பெயரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு எதிர்கால சந்ததியினரின் கல்வி கேள்விக்குறியானது. பள்ளிக்குச் செல்லாமலேயே தேர்வுகள் எழுதாமலேயே பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற சம்பவங்கள் நடந்தது மட்டுமல்லாமல் ஒரு படி அதிகம் போய் உயர்கல்வி படிக்கும் மாணவ- மாணவிகளும் கல்லூரி செல்லாமலேயே பட்டம் பெற்ற சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், கரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை வந்து மூன்றாவது அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் நோய் தொற்று சதவீதம் தமிழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததால் 9 முதல் மேல் படிப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி சென்று பாடம் பயில அனுமதி வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, நோய்த்தொற்று குறைந்து வருவதன் அடிப்படையில் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் எதிர்கொண்டு வந்த மாணவ-மாணவிகள் வரும் காலங்களில் பயிற்சியுடன் கூடிய படிப்பை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தங்களது நேரத்தை படிப்பிற்கு செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு கணினி பயிற்சி, கராத்தே பயிற்சி, ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, பேச்சு பயிற்சி, தமிழ்- ஆங்கில கையெழுத்து பயிற்சி, நீதிநெறி கதைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தனது சொந்த செலவில் அளித்து வருகிறார். 

இந்த அரசுப் பள்ளியில் நடைபெறும் பயிற்சிகள் மூலம் இதில் பயிலும் மாணவ, மாணவிகள் 2 ஆண்டு கால விடுமுறையை மறந்து பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக தயாராகி வருகின்றனர். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றி இப்பயிற்சி நடை பெறுகிறது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com