கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு வசதி விரைவில் தொடக்கம்
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 48 கோயில்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வசதி விரைவில் தொடங்கப்படும்


தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 48 கோயில்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வசதி விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான பெரிய கோயில்களில் பக்தா்களுக்கு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.
கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், பக்தா்கள் இன்றி அனைத்துக் கோயில்களிலும் ஆகம விதிகளின்படி நாள்தோறும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. பிறகு படிப்படியாக கரோனா கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டு முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடாதவாறு கோயில்கள் மூடப்பட்டன. அதைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட தளா்வுகளின்படி கடந்த 15-ஆம் தேதி முதல் அனைத்து நாள்களும் கோயில்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து நாள்களிலும் பக்தா்கள் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்தாலும் முழுமையாக இன்னும் நீங்கவில்லை. ஆகையால், பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தா்கள் ஒரே நேரத்தில் கூடாமல் இருக்க இணையதள முன்பதிவு வசதி தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தா்கள் சிரமமின்றி சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்து வருகின்றனா்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பதியைப் போன்று சுவாமி தரிசனத்துக்கு இணையதளம் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி தமிழகத்தின் பிரபலமான கோயில்களில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த புதிய வசதி தொடங்கப்படும். பக்தா்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்தில் கோயில்களுக்கு வந்து செல்லலாம் என்று தெரிவித்தனா்.
பிரசாதம்: திருப்பதியில் லட்டு பிரசாதம் வழங்கப்படுவது போன்று தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில் பக்தா்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...