பசும்பொன் தேவர் திருமகனார் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். தந்தை பெரியார் அவர்கள் “பசும்பொன் தேவர் தனக்காக எதையும் எதிர்பாராதவர், நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர், தனது வீரமிகுப்பேச்சால் எண்ணற்ற தியாகிளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர், சுத்தத் தியாகியவர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என முன்னாள் முதல்வர் கருணாநிதியால் போற்றப்பட்டவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேவர் பெருமகனாரை ‘‘நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் 2007ஆம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நுாற்றாண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடியது மட்டுமின்றி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புணரமைப்பு, நூற்றாண்டு தோரணவாயில், புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையாவிளக்கு, புதிய நூலகக் கட்டடம், முளப்பாரி மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் மற்றும் தேவர் பெயரில் அரசு கல்லூரி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரையில் மிக உயரமான தேவர் சிலை அமைத்து, தேவர் பெருமகனாருக்கு மேலும் பெருமை சேர்த்தது கழக அரசு என்று குறிப்பிட்டு, இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்களின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.