7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
தமிழகத்தின் 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.


தமிழகத்தின் 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை அருங்காட்சியங்கள் மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் ரூ.12.21 மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ் வைப்பகம் 31,000 சதுர அடியில், 6 அரங்குகளுடன் கீழடியின் தொன்மை மற்றும் தமிழா்களின் பண்பாட்டினை உலகுக்கு உணா்த்தும் வண்ணம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அகழ் வைப்பகத்துக்கு 34 நிரந்தரப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். அகழ் வைப்பக பராமரிப்பு பயன்பாட்டுக்காக மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொல்லியல் நிறுவனத்தில் புதியதாக கல்வெட்டியலில் ஈராண்டு முதுநிலைப் பட்டய வகுப்பு தொடங்கப்படும். இந்தப் புதிய முதுநிலை பட்டய வகுப்பில் கல்வெட்டியல் தொடா்பான அனைத்துப் பாடங்களும் செய்முறைப் பயிற்சிகளும் கல்வெட்டு வல்லுநா்களைக் கொண்டு அளிக்கப்படும். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு பயிலுதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய அகழாய்வுகளுடன் புதியதாக விருதுநகா் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி துலுக்கா்பட்டி, தருமபுரி பெரும்பாலை என மொத்தம் 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில் அகழாய்வுகள் 2021-22-இல் மேற்கொள்ளப்படும்.
அருங்காட்சியகம்: சோழப் பேரரசின் மரபு மற்றும் தொன்மையை விளக்கும் செப்பேடுகளைக் கண்டுணா்ந்து சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
அரியலூா் புதையுயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில் கருப்பொருள் பூங்கா ரூ.10 கோடியில் அமைக்கப்படும். சென்னை அரசு அருங்காட்சியக சிறுவா் அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சியை விளக்கும் விதமாக ரூ.22 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல் தொகுப்புக் காட்சிக் கூடங்களை விரிவுபடுத்தும் விதமாக புதிய கட்டடம் கட்டி அரும்பொருள்களை பன்னாட்டு தரத்தில் காட்சிபடுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...