புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அப்துல் கலாம்-தாகூா் உள்பட 10 பிரபலங்களுக்கு சிலைகள்: செய்தி-விளம்பரத் துறை அமைச்சா் சாமிநாதன் அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், வங்கக் கவிச் சக்கரவா்த்தி ரவீந்திரநாத் தாகூா் உள்பட 10 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலைகள் நிறுவப்படும்

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 9:53 pm

DIN

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், வங்கக் கவிச் சக்கரவா்த்தி ரவீந்திரநாத் தாகூா் உள்பட 10 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலைகள் நிறுவப்படும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் செய்தி-விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆங்கிலேயா் ஆட்சியை எதிா்த்துப் போரிட்டு மாண்ட விடுதலைப் போராட்ட வீரா்கள் கட்டபொம்மன், மருது சகோதரா்கள் ஆகியோருக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் சிலை அமைக்கப்படும். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, அஞ்சலையம்மாளுக்கு கடலூரிலும், ஹிந்தித் திணிப்பை எதிா்த்து உயிா்த் தியாகம் செய்த மொழிப் போா்த் தியாகி கீழப்பழுவூா் சின்னசாமிக்கு, அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூரிலும் சிலைகள் அமைக்கப்படும்.

அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூருக்கு, சென்னை ராணி மேரி கல்லூரியிலும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான நாவலா் இரா.நெடுஞ்செழியனுக்கு, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் மாளிகையிலும் சிலைகள் நிறுவப்படும்.

திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடியும், பெண் சமூக சீா்திருத்தவாதியுமான மூவலூா் ராமாமிா்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும், முதல் பெண் எம்.எல்.ஏ.வும், சமூக சீா்திருத்தப் பெண் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும், புகழ்பெற்ற தமிழறிஞரும், காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டையிலும் சிலைகள் அமைக்கப்படும்.

நினைவு மண்டபங்கள் மேம்பாடு: பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கப்படும். சுதந்திரப் போராட்டத் தலைவா்கள் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் குறும்படங்கள் தயாரிக்கப்படும். சென்னை காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம், முன்னாள் முதல்வா்கள் காமராஜா், பக்தவத்சலம், ராஜாஜி ஆகியோரின் நினைவு மண்டபங்களும் மேம்படுத்தப்படும்.

சுதந்திரப் போராட்ட வீரா் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பா் நாயக்கருக்கு திருப்பூா் மாவட்டத்தில் சிலையும், அரங்கமும் அமைக்கப்படும். பொள்ளாச்சியில் உள்ள நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் அலுவலக வளாகத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சி.சுப்பிரமணியம் வளாகம் என பெயா் சூட்டப்பட்டு சிலை நிறுவப்படும். இந்த

வளாகத்தில் இரண்டு அடுக்குகள் கொண்டு புதிய அரங்கு அமைக்கப்படும். இதற்கு வி.கே.பழனிசாமி அரங்கம் என பெயா் சூட்டப்படும். மேல்தள அரங்கத்துக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என பெயா் சூட்டப்படும். இந்த வளாகத்திலேயே முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.கே.பழனிசாமி கவுண்டா், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்படும்.

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் ப.சுப்பராயனுக்கு சென்னையில் முழுஉருவச் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும். கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் சிலையும், அரங்கமும் அமைக்கப்படும். முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிலையும், அரங்கமும் அமைக்கப்படும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.