எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: முதல்வர் 

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை செயலாளர்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: முதல்வர்
Updated On :16 செப்டம்பர் 2021, 7:44 am

DIN

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை செயலாளர்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  நாம் இப்போது ஐந்து மலைகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதில் 500 வாக்குறுதிகள் அடங்கியுள்ளன. மாவட்ட ரீதியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தோம்.

அதன் பிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவைத் தொடங்கியதும் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை, 110-ன் கீழ் என அரசு சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

இவற்றைத் தான் நான் ஐந்து மலைகள் என்று கூறினேன். அரசு வெளியிட்ட அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகள், அரசாணை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது. அவற்றை விரைந்து செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பு அவசியம். தேவை. வேகமாக, விவேகமாக காரியங்களை செய்ய வேண்டும். 

அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பேன் என்றும் பேரவையில் சொல்லியிருக்கிறேன். அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளின் பணிகளையும் நேரடியாகக் கேட்டறிவேன். அரசு வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை.

அரசு அறிவித்த அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்ள எனது அறையில் ஆன்லைன் தகவல் பலகையைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, எனது அறையில் ஒரு ஒளிபரப்பு திரையை வைத்து, அதில், அரசு அறிவித்த திட்டங்களின் நிலை, செயல்படும் விதம் குறித்து  அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும். வாரம் ஒரு முறை இந்த தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்வேன். 

ஒரு அறிவிப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று அர்த்தமாகும்.

ஒவ்வொரு அறிவிப்புக்கும் கால நிர்ணயம் செய்யப்பட்டு, அதனை அந்த காலத்துக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்ததுதான் இந்த அரசு. இணைந்து செயல்படுங்கள். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்.

தமிழகத்தில் ஒரு துறை முன்னேறியிருக்கிறது என்ற நிலை இருக்கக் கூடாது. அனைத்துத் துறையும் ஒருங்கே முன்னேறியது என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த அரசுத் துறைகள் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுததான் திட்டங்கள் செம்மையாக செயல்படுத்தப்படும். அதற்காக தகவல் பலகை ஏற்படுத்தப்பட்டு திட்டங்களின் நிலையை நேரடியாக தெரிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.