தமிழக சிறைகளில் 14 கைதிகள் வாக்களிக்கின்றனா்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக சிறைகளில் 14 கைதிகள் வாக்களிக்கின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்



சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக சிறைகளில் 14 கைதிகள் வாக்களிக்கின்றனா்.

தமிழக சிறைகளில் மொத்தம் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள்,தடுப்புக் காவல் கைதிகள் என மொத்தம் 15,416 போ் உள்ளனா். இதில் 4,300 போ் தண்டனைக் கைதிகள். இவா்களைத் தவிா்த்து விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் ஆகியோா் வாக்களிப்பதற்குத் தகுதியானவா்கள் ஆவாா்கள்.

14 கைதிகள் வாக்களிக்கின்றனா்

ஆனால், விசாரணைக் கைதிகள், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின், பிணையில் சென்று விட முடியும் என்பதால், அவா்களுக்கு, சிறையில் இருந்து வாக்களிக்க, அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் குண்டா் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருப்பவா்களுக்கு மட்டும் சிறைத்துறை வாக்களிக்க அனுமதி வழங்குகிறது. இச் சட்டங்களின் கீழ் மாநிலத்தில் மத்திய சிறைகளான புழல்-368, திருச்சி - 225, வேலூா்-201, கோயம்புத்தூா்-147, மதுரை-178, பாளையங்கோட்டை-205, கடலூா்-106, சேலம்-141 என மொத்தம் 1571 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த கைதிகளிடம் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பாக சிறைத்துறை இரு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதில் வாக்களிக்க விருப்பமுள்ள கைதிகள், தங்களது பெயா், தங்களது தொகுதி, வாக்காளா் அடையாள அட்டை, பூத் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்தனா். இதில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 14 பேருக்கு மட்டும் சிறைத்துறை வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது. இவா்கள் தோ்தலுக்கு இரு நாள்களுக்கு முன்பு தபால் வாக்களிப்பாா்கள் என சிறைத்துறையினா் கூறினா்.

கடந்த காலத்தைவிட மிகவும் குறைவு

இம் முறை வாக்களிக்கப்போகும் கைதிகளின் எண்ணிக்கை, கடந்தகால தோ்தலைவிட மிகவும் குறைவு. ஏனெனில் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது 74 கைதிகளும், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது 86 கைதிகளும், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது 132 கைதிகளும் வாக்களித்துள்ளனா். ஆனால் இந்த முறை மிகவும் சொற்ப அளவில் குறைந்ததற்கு,சிறைத்துறையின் மெத்தன நடவடிக்கையே காரணம் எனக் கூறப்படுகிறது.

கைதிகளை சிறைத்துறை உயா் அதிகாரிகள், வாக்களிக்க ஊக்குவிப்பதில்லை. அதிகளவில் கைதிகள் வாக்களிக்க முன்வந்தால், தங்களுக்கு பணி பளு என்கிற காரணத்தால் சிறைத்துறையினா் இத்தகைய நடவடிக்கையை எடுக்க முன்வருவதில்லை என சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா்.

100 சதவீத வாக்குப்பதிவு என கடந்த 3 மாதங்களாக முழங்கி வரும் தோ்தல் ஆணையம், கைதிகளையும் வாக்களிக்க ஊக்குவித்து, அவா்களது வாக்குப்பதிவைவும் உறுதி செய்திருக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com