தலைவர்கள் ஒரு பார்வை...

எடப்பாடி கே.பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான், டாக்டர் எஸ்.ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, பிரேமலதா விஜயகாந்த்
தலைவர்கள் ஒரு பார்வை...

எடப்பாடி கே.பழனிசாமி

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி 1974இல் கட்சியின் கிளைச் செயலராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கடந்த 1989 ஆம் ஆண்டு அதிமுகவின் ஜெயலலிதா அணியில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஒன்றிணைந்த அதிமுக சார்பில் 1991 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
1998-ஆம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1999, 2004 தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 2011, 2016 பேரவைத் தேர்தல்களில் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011 - 2016 வரை நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016-இல் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017 இல் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதல்வராகப் பொறுப்பு வகித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.
கட்சியில் சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலர், வடக்கு மாவட்டச் செயலர், கொள்கை பரப்புச் செயலர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள இவர், தற்போது சேலம் புறநகர் மாவட்டச் செயலராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
பிறந்த தேதி : 12.05.1954
பெற்றோர் : கருப்ப கவுண்டர் - தவுசாயம்மாள்
சொந்த ஊர்: சிலுவம்பாளையம், எடப்பாடி
உடன் பிறந்தவர்கள்: ஒரு சகோதரர், ஒரு சகோதரி
தொழில்: வேளாண்மை, அரசியல்வாதி.
கல்வி: பி.எஸ்சி.
குடும்பம்: மனைவி ராதா, மகன் மிதுன்
நிலையான முகவரி: 174, ஜே 3,
ராஜாபுரம் முதல் தெரு,
நெடுஞ்சாலை நகர், சேலம் - 5

மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வந்தவர். தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை முடிதிருத்தும் கடையில் தொடங்கினார்.
1970களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாவட்டப் பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க வைத்ததுடன், கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார். 1973 இல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். பின்னர் 1980 இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கினார்.
தொடக்கத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராக செயல்பட்ட மு.க.ஸ்டாலின், 1984 இல் இளைஞரணி செயலராக நியமிக்கப்பட்டார். நீண்டகாலமாக திமுகவின் இளைஞரணி செயலராக இருந்த அவர், சிறிது காலம் திமுகவின் துணைப் பொதுச் செயலராகவும் இருந்தார். பின்னர் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட அவர், 2017 இல் திமுகவின் செயல் தலைவராகவும், 2018 இல் திமுக தலைவராகவும் உயர்ந்தார்.
முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து 1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டு தேர்தல்களிலும், 2011, 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார்.
1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி மேயராகவும் மு.க.ஸ்டாலின் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த அவர், 2009 முதல் 2011 வரை தமிழக துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
பிறந்த தேதி: 1.3.1953
பெற்றோர்: மு.கருணாநிதி - தயாளு அம்மாள்
சொந்த ஊர்: சென்னை
உடன் பிறந்தவர்கள்: மு.க.அழகிரி,
மு.க.செல்வி, மு.க.தமிழரசு
தொழில்: அரசியல்வாதி
கல்வி: பி.ஏ.
குடும்பம்: மனைவி துர்கா, மகன் உதயநிதி,
மகள் செந்தாமரை
முகவரி: 25/9 சித்தரஞ்சன் சாலை,
செனடாப் 2ஆவது வீதி,
சென்னை 18.

கமல்ஹாசன்

1960-ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத் துறையில் அறிமுகமான கமல்ஹாசன், கடந்த 60 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை, நடனம், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் என பல்வேறு பிரிவுகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வருபவர். நடிப்புக்காக 4 தேசிய விருதுகள், தமிழக அரசின் 10 விருதுகள், ஆந்திர அரசின் 4 விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே விருதுகளைப் பெற்றுள்ளார்.
2018-ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் இவரது கட்சிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. 2021 பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிறந்த தேதி: 7.11.1954
பெற்றோர்: ஸ்ரீநிவாசன் - ராஜலட்சுமி
சொந்த ஊர்: பரமக்குடி
கல்வி: 8 - ஆம் வகுப்பு
தொழில்: நடிகர், தயாரிப்பாளர்,
அரசியல்வாதி
குடும்பம்: மகள்கள் ஸ்ருதி ஹாசன்,
அக்ஷரா ஹாசன்
முகவரி: 218 டிடிகே சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை 18

டிடிவி தினகரன்

டிடிவி.தினகரன் 1963-ஆம் ஆண்டு டிச.13--ஆம் தேதி, திருவாரூர் மாவட்டம்- திருத்துறைப் பூண்டியில் பிறந்தார். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1987-இல் இறந்தபோது, அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள, சசிகலாவின் குடும்பத்து இளைஞர்களில் ஒருவராக போயஸ் தோட்டத்துக்கு வந்தார் டிடிவி தினகரன். 1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார்.
2004-இல் தேனி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணிடம் வெற்றி வாய்ப்பை தினகரன் இழந்தார். ஆனாலும் தினகரனை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. 2010-ஆம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், அதன் பின்னர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினார். பின்னர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார்,
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் . அதன் பின்னர் சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக உதவியாக தினகரன் இருந்தார். சசிகலா சிறையில் இருந்தபோது, அமமுகவைத் தொடங்கி நிர்வகித்து வருகிறார். இதனிடையே ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். தற்போது தேமுதிக, அகில இந்திய மஜ்லிஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளிலும் அமமுக களம் காண்கிறது.
பிறந்த தேதி: 13.12.1963,
பெற்றோர்: விவேகானந்தம், வனிதாமணி
சொந்த ஊர்: திருத்துறைப்பூண்டி
தொழில்: அரசியல்வாதி, தொழிலதிபர்
கல்வி: பிளஸ் 2
குடும்பம்: மனைவி அனுராதா,
மகள் ஜெயஹரிணி
முகவரி: எண் 5, 4-ஆவது தெரு,
வெங்கடேஸ்வரா நகர்,
கற்பகம் கார்டன், அடையாறு,
சென்னை -600020

சீமான்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில், செந்தமிழன் - அன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1966 நவம்பர் 8-ஆம் தேதி பிறந்தார் சீமான். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பையும், இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலையும் பயின்றார்.
1991-இல் சென்னைக்குக் குடியேறி உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். சில திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் திரையுலகில் தன் முத்திரையைப் பதித்தார்.
2008-இல் இலங்கை உள்நாட்டுப் போரைக் கண்டித்து ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2009-ஆம் ஆண்டு, மே 18-இல் மதுரையில் சீமான் தலைமையில் தமிழ் உணர்வாளர்கள் கூடி "நாம் தமிழர்' என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தனர். இதையடுத்து 2010-ஆம் ஆண்டு, மே 10-இல் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.
2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல்களில் , இலங்கைப் போரில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி திமுகவையும், காங்கிரஸையும் எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில், "தமிழகத்தைத் தமிழன்தான் ஆள வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்து, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர் கடலூர் தொகுதியில் களம் கண்டார். 1.1 சதவீத வாக்குகளையே பெற்றார். இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என்று சரி சமமாக களத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார். 3.87 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
நடைபெறவிருக்கும் தேர்தலிலும் 234 தொகுதிகளில் 117 ஆண்கள், 117 பெண்கள் என வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
பிறந்ததேதி: 8.11.1966
பெற்றோர்: செந்தமிழன்-அன்னம்மாள்
சொந்த ஊர்: சிவகங்கை
தொழில்: அரசியல்வாதி
கல்வி: பி.ஏ. பொருளாதாரம்
குடும்பம்: மனைவி கயல்விழி,
மகன் மாவீரன் பிரபாகரன்
முகவரி:எண்.92-14,வெங்கடேசா நகர்,
2ஆவது வீதி, விருகம்பாக்கம்,
சென்னை-92.

டாக்டர் எஸ்.ராமதாஸ்

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியைத் தொடங்கிய டாக்டர் ராமதாஸ், 1980 இல் வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். 1989-இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு 1987-இல் அவர் நடத்திய போராட்டம் வட தமிழகத்தை முடக்கியது. கலவரம், துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து 1989-இல் திமுக ஆட்சிக்கு வந்தது. வன்னியர் உள்ளிட்ட 107 சமூகங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி, சமச்சீர் கல்வி, மதுவிலக்குக்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, பசுமைத் தாயகம் உள்ளிட்ட அமைப்புகளைத் தொடங்கியிருக்கிறார்.
பிறந்த தேதி: 25.7.1939
பெற்றோர்: சஞ்சீவிராயர் - நவநீதம் அம்மாள்
சொந்த ஊர்: விழுப்புரம்
கல்வி: எம்.பி.பி.எஸ்.
தொழில்: மருத்துவர், அரசியல்வாதி
குடும்பம்: மனைவி சரஸ்வதி அம்மாள்,
மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,
2 மகள்கள் உள்ளனர்.
முகவரி: 10, காமாட்சி அம்மன் கோயில் தெரு,
திண்டிவனம்.

கே.எஸ்.அழகிரி

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சித் தலைவராக 1986-இல் அரசியல் பயணத்தைத் தொடங்கிய அழகிரி, 1991 முதல் 1996, 1996 முதல் 2001 வரை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.
2009-ஆம் ஆண்டு கடலூர் தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2014-ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் இருந்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக 2019 முதல் இருந்து வருகிறார்.
பிறந்த தேதி: 22.10.1952
பெற்றோர்: சம்பந்தம் - கமலம்
சொந்த ஊர்: கீரப்பாளையம் கிராமம், கடலூர்
கல்வி: பி.ஏ.
தொழில்: விவசாயி, தொழில்முனைவோர்,
அரசியல்வாதி
குடும்பம்: மனைவி வத்சலா, ஒரு மகன், 5 மகள்கள்
முகவரி: 6 ஏ, பழைய டவர் பிளாக்,
நந்தனம், சென்னை 35.

பிரேமலதா விஜயகாந்த்

பிரபல நடிகர், நடிகர் சங்கத் தலைவர், அரசியல் கட்சி தொடங்கி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என கணவரின் பயணத்தில் வாழ்க்கை துணையாக மட்டுமின்றி அவரை வழிநடத்தும் பெண்மணியாக திகழ்ந்து வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சர்க்கரை தொழிற்சாலையின் மேலாளர். ஒரு அக்கா, ஒரு தம்பி. பி.ஏ ஆங்கில இலக்கிய பட்டதாரி பிரேமலதா.
இவர் தடகள வீராங்கனை. ஐ.பி.எஸ் கனவும் அவருக்கு இருந்தது. உச்ச நடிகர்களில் ஒருவரான விஜயகாந்த் தன்னை மணக்க இருந்த மகிழ்ச்சியில் ஐபிஎஸ் கனவை துறந்தார்.


இவர்களது திருமணத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் கருணாநிதி முன் நின்று நடத்தி வைத்தார். இல்லத்தரசியாக மட்டுமே இல்லாமல், கல்லூரி நிர்வாகம், ரசிகர் மன்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டார். 2005 ஆண்டில் தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2006 இல் பொதுத் தேர்தலை சந்தித்கது அக் கட்சி. அப்போது விஜயகாந்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். தொடக்கத்தில் நேரடியாக கட்சிப் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தார். ஆனால் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடுவது காலத்தின் கட்டாயமானது.
கட்சியின் பொருளாளர் பொறுப்பை ஏற்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் தலைவராக விளங்கி வருகிறார் பிரேமலதா, இந்த பேரவைத் தேர்தலில் முதல்முதலாக களம் காணும் அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிறந்ததேதி: 18.3.1969,
பெற்றோர்: கண்ணையா, லதா
சொந்த ஊர்: செம்பேடு கிராமம், குடியாத்தம்
உடன்பிறந்தவர்கள்: ஒரு சகோதரி,
ஒரு சகோதரர்
தொழில்: அரசியல்வாதி, கல்லூரி நிர்வாகி
கல்வி: பி.ஏ ஆங்கில இலக்கியம்
குடும்பம்: கணவர் விஜயகாந்த்,
மகன்கள்: சண்முக பாண்டியன்,
விஜய பிரபாகரன்
முகவரி: எண்10, கண்ணம்மாள் செயின்ட்,
கண்ணபிரான் காலனி, சாலிகிராமம்,
சென்னை -600093

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com