தமிழகத்தில் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்
தமிழகத்தில் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,

கரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.

1. எனவே மறு உத்தரவு வரும் வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

 மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 முதல், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

அதேப்போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

2. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள் 10.4.2021 முதல் அமலுக்கு வரும்.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிருவாகம் செய்ய வேண்டும். மேலும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரம் மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும், உணவகங்களில் இரவு 11.00 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.

கேளிக்கை விடுதிகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு  மட்டும் அனுமதிக்கப்படும்.

31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும். 
இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை / திரைபடக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொண்டு, தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிருவாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com