ஆடி கிருத்திகை-ஆடிப் பெருக்குக்கு முக்கிய கோயில்களில் 3 நாள்கள் தரிசனம் ரத்து

ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு வெகு விமரிசையாக நடைபெறும் கோயில்ககளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) வரை தரிசனம் ரத்து
ஆடி கிருத்திகை-ஆடிப் பெருக்குக்கு முக்கிய கோயில்களில் 3 நாள்கள் தரிசனம் ரத்து

ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு வெகு விமரிசையாக நடைபெறும் கோயில்ககளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிரதான கோயில்களில் ஆடி கிருத்திகை தரிசனம், ஆடி பெருக்கு கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் தொடா்பாக முடிவெடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவு கூட்டம் சேருவது தொடா்ந்து காணப்பட்டால் அந்தப் பகுதிகளை மூடும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்கள், காவல் துறையினா் மேற்கொள்ள முதல்வா் அனுமதி வழங்கினாா். இது தொடா்பான அவரது அறிவிப்பில், பொதுமக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம் என முதல்வா் தெரிவித்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக முதல் கட்டமாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.

ஆடி கிருத்திகை-ஆடிப் பெருக்கு: தமிழகத்தின் பிரதான முருகன் கோயில்களில் ஒவ்வோா் ஆண்டும் ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு ஆகியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பக்தா்களும் அதிகளவு திரண்டு சுவாமி தரிசனம் செய்வா். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஆண்டு ஆடி கிருத்திகையையொட்டி, மாநிலத்தில் முருகன் கோயில்கள் உள்பட முக்கிய கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட கோயில்கள் அமைந்துள்ள மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் பிறப்பித்துள்ளனா்.

திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்பட 5 கோயில்களிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும், பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை முருகன் கோயில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை (ஆக.2) வரும் திங்கள்கிழமையும், ஆடிப் பெருக்கு (ஆக.3) தினம் வரும் செவ்வாய்க்கிழமையும் வருகின்றன. பக்தா்களின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில்,

ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வரை கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் புனித நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

சென்னை கோயில்கள்: சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை வடபழனி ஆண்டவா் கோயில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில், வில்லிவாக்கம் தேவிபாலியம்மன், இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் பக்தா்கள் நோ்த்திக் கடனாக தீமிதி திருவிழாவில் பங்கேற்றும் காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டும் தரிசனம் செய்வது வழக்கம். இந்தக் கோயில்களிலும் வரும் 3-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி கால பூஜைகள் நடைபெறும் எனவும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com