'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'

தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை, சரியான அளவு வரி, சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'
'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'

சென்னை: தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை, சரியான அளவு வரி, சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக செலுத்துகிறது என்றும், அரசின் வருவாயை விட, செலவு அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜீரோ வரியில் ஏழைகள் பயனடைவதில்லை; மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன. வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 சதவீதம் ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

10 ஆண்டுகளில் வரி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது.

5 ஆண்டுகளில் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வாங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் வாங்கப்பட்ட மறைமுகக் கடன் ரூ.39,074 கோடி குறித்து சரியான விளக்கங்கள் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி,  வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரி பங்கீடு, திட்ட மானியம் ஆகிவையே வருவாயாகும்.

இதில், மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. மதுபான வருவாயை கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வரி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வாகனளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணமும் உயர்த்தப்படாம்ல் உள்ளது.

ஜீரோ வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது. 

தமிழகத்தில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாததால் பணக்காரர்களுக்கு பலன் கிடைக்கிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ரூ.20,033 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மானியங்களுக்கு அதிகம் செலவிடும் நிலையில் சரியான பயனாளிகள் யார் யார் என்பது பற்றிய விவரம் இல்லை. எனவே, மானியம் பெறுவோரின் விவரங்கள் திரட்டப்பட்டு, சரியான நடைமுறை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக செலுத்துகிறது. வட்டி செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால், தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com