அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரிய செந்தில் பாலாஜி

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, சண்முகம், அசோக்குமாா், ராஜ்குமாா் என்ற ஜெயராஜ்குமாா் ஆகியோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்யப்பட்டது. 

இந்த புகாரை விசாரித்த போலீசாா், செந்தில்பாலாஜி உள்பட 4 போ் மீதும் 2018-ம் ஆண்டு 3 வழக்குகளை பதிவு செய்தனா். இந்த வழக்குகளின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மையில் இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண்மையில் போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இதற்கிடையே மூன்று வழக்குகளில் ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான சண்முகம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், புகாா்தாரருடன் சமரசம் ஏற்பட்டு விட்டதாக சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த உயா்நீதிமன்றம், செந்தில்பாலாஜி, சண்முகம் உள்ளிட்டோா் மீதான ஒரு மோசடி வழக்கை ரத்து செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினா் விசாரணை செய்தனா். அமலாக்கத்துறையின் முதல் கட்ட விசாரணையில், செந்தில் பாலாஜி மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து செந்தில்பாலாஜி உள்பட அந்த வழக்கில் தொடா்புடையவா்கள் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கின் விசாரணைக்கு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாகவும்  அமலாக்கத்துறையினா் தெரிவித்தனா். 

இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவிருப்பதால் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com