மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: மு.க. ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: மு.க. ஸ்டாலின்
மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: மு.க. ஸ்டாலின்


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் முறையாக சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில்  நினைவிடம் அமைக்கப்படும். 

கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் பேசுகையில், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி. 70 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்தவர். போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் வென்றவர். தோல்வி அவரைத் தொட்டதே இல்லை, வெற்றி அவரைக் கைவிட்டதேயில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். கல்வி, சமூக பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர். இந்திய அரசியலை வழிநடத்திய ஞானி.

80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 60 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 5 முறை முதல்வதாக இருந்தவர் கருணாநிதி, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், சென்னைக்கு மெட்ரோ திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூலகம், நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சீட்டு உள்ளிட்ட  நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி. 

நாட்டில் கருணாநிதி போல ஒரு அரசியல் தலைவர் இருந்ததே இல்லை என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com