நிஜத்தில் ஒரு 'பரியேறும் பெருமாள்'! சாதியின் பெயரால் அடித்துக்கொல்லப்பட்ட நாய்...

'பரியேறும் பெருமாள்' படத்தில் சாதிப் பாகுபாட்டினால் கறுப்பி என்ற நாய்  கொல்லப்பட்டது போல ஒரு மோசமான சம்பவம் விருதுநகர் மாவட்டத்திலும் நேர்ந்திருக்கிறது.
நிஜத்தில் ஒரு 'பரியேறும் பெருமாள்'! சாதியின் பெயரால் அடித்துக்கொல்லப்பட்ட நாய்...

சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக நூற்றாண்டுகளாகத் தலைவர்கள் குரல் கொடுத்துவந்தாலும், சட்டங்கள் பல இயற்றியும் இன்னமும் அது ஒழிந்தபாடில்லை.

வெட்ட வெட்டத் தழைக்கும் சில விஷ மரங்களைப் போல சமூகத்தில் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. சாதியை அடிப்படையாக வைத்து பல வன்முறைகளும் கொடூரங்களும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. 

சாதிய பாகுபாடுகள், சாதிய அடக்குமுறைகள் பற்றிப் பேசும் பல படங்களும் சமீபத்தில் அதிகம் எடுக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 2018-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான படம்தான் 'பரியேறும் பெருமாள்'.

இந்தப் படத்துடன் இதில் வரும் 'கறுப்பி' என்ற கதாபாத்திரத்தைத் திரைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் யாரும்  அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 

தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார் இயக்குநர் மாரி செல்வராஜ். 

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வேட்டை நாய்களை வைத்திருக்கக் கூடாது என்ற நடைமுறை இன்றும் பெரும்பாலான தென் மாவட்டப் பகுதிகளில் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அப்படி, உயர்ந்த - தாழ்ந்த சாதியினரிடையே ஏற்பட்ட மோதலுக்கு பலிகடா ஆகிறது கறுப்பி என்ற, பரியேறும் பெருமாள் வளர்க்கும் நாய். 

இதுபோல ஒரு சம்பவம் விருதுநகரில் இப்போது நிஜமாக நடந்திருக்கிறது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய நாயை அடித்துக்கொன்றுள்ள னர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முனியசாமி (38) என்பவர், பெட்டை வேட்டை நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய், உயர் சாதியைச் சேர்ந்தவரான நாகராஜ் (44) என்பவர் வளர்த்துவந்த நாயைக் கடித்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற நாகராஜையும் கடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் முனியசாமியின் வேட்டை நாயைப் பிடித்து, கட்டையால் மற்றும் கல்லால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதோடு மட்டுமின்றி, தங்களுடைய இரண்டு நாய்களை அவிழ்த்துவிட்டு, முனியசாமியின் நாயைக் கொன்றுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை விடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பரவவும் செய்திருக்கிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி இச்சம்பவம் நடந்ததாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். 

நாயைத் துன்புறுத்தும்போது, 'ஒரு தலித்தின் நாய், உயர்ந்த சாதியினரின் நாயை எப்படிக் கடிக்கும்? என்று நாகராஜ் ஆவேசத்தோடு கூறியுள்ளார். நாய் இறந்த பிறகு, 'தாழ்ந்த சாதியினர் வேட்டை நாயை வளர்க்கக் கூடாது' என்றும் நாகராஜ் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவம் நடந்த அன்று முனியசாமி, காவல்துறை மற்றும் ஊர்ப் பெரியவர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால், புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று நாகராஜ் தரப்பினர் மிரட்டியதால் அவரும் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவரது நாயும் கிராமத்திற்கு வெளியேதான் புதைக்கப்பட்டது என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் உயர் அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் பிற்பகலிலே நாகராஜ் மற்றும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். நாகராஜின் இரு மகன்களும் 18 வயது நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விலங்கு நல அறக்கட்டளையின் நிறுவனர் முருகன் இதுகுறித்து கூறுகையில், 'இந்த வழக்கு முறையாக பதிவு செய்யப்படவில்லை. தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்கள் மட்டுமே இந்த கிராமத்தில் வசிக்கின்றன. எனவே, அவர்கள் எளிதில் அச்சுறுத்தப்படலாம். அச்சுறுத்தல் காரணமாகவே முனியசாமியும் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்' என்றார். 

சமூக ஆர்வலர் வீரப்பெருமாள் இதுகுறித்து, 'காவல்துறையினர் இரு தரப்பினரிடமிருந்தும் கடிதங்களைப் பெற்று இது தொடர்பாக எந்த பிரச்னையும் ஏற்படுத்தக்கூடாது என்று கூறி குற்றவாளிகளை விடுவித்தனர். இருப்பினும், ஒரு கால்நடை மருத்துவரிடம் தெரிவித்து பிரேத பரிசோதனை நடத்தக் காவல்துறையை நான் வலியுறுத்தியும் அது நடக்கவில்லை' என்று கூறினார். இறுதியாக, இந்தப் பிரச்னை திங்கள்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர், 'ஆறு மாதங்களுக்கு முன்பு முனியசாமியின் நாய், நாகராஜின் நாயைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ​​'இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது' என்று முனியசாமியை நாகராஜ் எச்சரித்துள்ளார்

இருப்பினும், இப்போது மீண்டும் அதேபோல் நடந்ததால் நாகராஜ், தனது மகன்களுடன் நாயைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. முனியசாமி ஊருக்கு வெளியே இருப்பதாகக் கூறப்படுவதால், விலங்கு ஆர்வலரின் புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்குப்பதிவு செய்வோம்.

பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரு தரப்பினரும் சமரசத்திற்கு வந்ததால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கு குறித்து ஒரு கால்நடை மருத்துவரின் கருத்தைப் பெறவிருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை மாலை விலங்கு நல ஆர்வலர் முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், பிரிவு 428 மற்றும் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 11 (1) (l) இன் கீழ் ஏழாயிரம்பண்ணை காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாகராஜ் மற்றும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேம்பட்டு வரும் சமூகத்தில், சக மனிதர்களின் மீதான சாதிய வன்மம் சமூக  அச்சுறுத்தலாக கருதப்படும் நிலையில், உயிரினங்களை வைத்தும் சாதிய வன்முறையை வளர்ப்பது அருவருப்பானதாகத்தான் இருக்கிறது.

'நீங்க நீங்களா இருக்கற வரைக்கும்… நான் நாயாதான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும்... இங்க எதுவுமே மாறாது… இப்டியேதான் இருக்கும்…' என்கிற மாரி செல்வராஜின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

நாயையும் விட்டுவைக்கவில்லை இந்தச் சாதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com