கரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

கரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் அறிவிப்பு
கரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் அறிவிப்பு


சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன.  முகக்கவசம் அணியாதது, ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றியது உள்ளிட்ட விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன.

கரோனா ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவது பற்றிய முதல்வரின் அறிவிப்பில்,  மத்திய அரசு, கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் - 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் - 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதனையடுத்து காவல்துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com