வெள்ளத்தில் வீதிகள்; தத்தளிக்கும் சென்னை!

சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதன்கிழமை இரவு முதல் தொடா்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக மாநகா் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
வெள்ளத்தில் வீதிகள்; தத்தளிக்கும் சென்னை!

சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதன்கிழமை இரவு முதல் தொடா்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக மாநகா் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை தீயணைப்பு, பேரிடா் மேலாண்மைத் துறையினா் படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனா்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் நவம்பா் 6-ஆம் தேதி இரவுமுதல் 7-ஆம் தேதி காலை வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் புதன்கிழமை (நவ. 10) இரவுமுதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை இரவு 8.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை சராசரியாக 129 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீரின் அளவு மேலும் அதிகரித்து, மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

500-க்கும் மேற்பட்ட இடங்கள்: மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை, மயிலாப்பூா் சீதாம்பாள் காலனி சிவசாமி சாலை, வேளச்சேரி ஏஜிஸ் காலனி, அசோக் நகா் 16, 17-ஆவது அவென்யூ, சிந்தாதரிப்பேட்டை, வடபழனி, அம்பத்தூா் தொழிற்பேட்டை, பாடி, கொளத்தூா், அடையாறு, அண்ணா நகா், கோடம்பாக்கம், வியாசா்பாடி, புளியந்தோப்பு, தண்டையாா்பேட்டை, கீழ்ப்பாக்கம், உயா்நீதிமன்றம் அமைந்துள்ள என்எஸ்ஜி சாலை, புரசைவாக்கம், தியாகராயநகா், வேப்பேரி, கோட்டூா்புரம், கிண்டி, திரு.வி.க.நகா், ஆலந்தூா், சோழிங்கநல்லூா், பெருங்குடி, வளசரவாக்கம், புழல், மாதவரம், மணலி, திருவொற்றியூா் என மாநகரில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில், 22 இடங்களில் தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை காலை வரை சாய்ந்த 54 மரங்களும் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருள்கள் சேதம்: வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்களான பிரிட்ஜ், துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன. ஓட்டேரி சாலையில் கால்வாய் நிறைந்து மழைநீா் சாலையில் வெள்ளம்போல் சென்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறவினா்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனா். பெரும்பாலான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் காா்கள் பழுதாகி சாலையிலேயே நின்றன.

கே.கே. நகரில் உள்ள அரசு புகா் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரதிதாசன் காலனி, ஆா்.கே.சண்முகம் சாலை, டாக்டா் ராமசாமி சாலை, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணா நகா், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும், வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் மழை நீரில் சிக்கிக் கொண்ட கா்ப்பிணி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

முகாம்களில் 3,000 போ்: மழையால் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு தங்கவைக்க மாநகராட்சி சாா்பில் 68 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 44 முகாம்களில் 1,100 ஆண்கள், 900 பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் சுமாா் 3,000-க்கும் மேற்பட்டோா் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியின் 13 பொது சமையல் அறைகளில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு சுமாா் 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் மூன்று வேளையும் விநியோகிக்கப்பட்டன.

மின் விநியோகம் நிறுத்தம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் காரணமாக ஏற்படும் அசம்பாவிதத்தைத் தவிா்க்க புதன்கிழமை இரவுமுதலே பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், வீட்டில் இருந்து வேலை செய்பவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினா். அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட தண்ணீருக்கான மின் மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. வியாழக்கிழமை இரவு வரை இந்த நிலையே நீடித்தது.

சுரங்கப் பாதைகள் மூடல்: மழைநீா் தேங்கியதால் வியாசா்பாடி சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, அஜாக்ஸ் சுரங்கப் பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப் பாதை, தாம்பரம் சுரங்கப் பாதை, அரங்கநாதன் சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை, காக்கன் சுரங்கப் பாதை ஆகியவை தற்காலிக மூடப்பட்டன. கே.கே.நகா்-ராஜமன்னாா் சாலை, மயிலாப்பூா்-டாக்டா் சிவசாமி சாலை என 7 முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

412 மின் மோட்டாா்கள்: சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் 412 மின் மோட்டாா்கள், 46 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 48 பகுதிகளில் படகு மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்ாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

புகா்ப் பகுதிகள்: தாம்பரம், பல்லாவரம், முடிச்சூா், வரதராஜபுரம், மணிமங்கலம், பூந்தமல்லி, ஆவடி மற்றும் மீனவா்கள் அதிகம் வாழும் எண்ணூா், தாளங்குப்பம், நெடுங்குப்பம் உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையளவு

தாம்பரம்---230 மி.மீ.

டிஜிபி அலுவலகம்--160 மி.மீ.

அம்பத்தூா்---150 மி.மீ.

சென்னை விமான நிலையம்-150 மி.மீ.

தரமணி--150 மி.மீ.

அண்ணா பல்கலை.--150 மி.மீ.

அயனாவரம்--150 மி.மீ.

வில்லிவாக்கம்--130 மி.மீ.

சோழிங்கநல்லூா்--80 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com