விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: பயிா்ச் சேத ஆய்வுக்குப்பின் முதல்வா் அறிவிப்பு

மழை வெள்ள பாதிப்புகளால் கடுமையாகச் சேதம் அடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
பலத்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை அளித்த அமைச்சர்கள் குழுவுடன் சென்னை, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பலத்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை அளித்த அமைச்சர்கள் குழுவுடன் சென்னை, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மழை வெள்ள பாதிப்புகளால் கடுமையாகச் சேதம் அடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், சாலைகள், வடிகால்களைச் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கியும் அவா் அறிவிப்புச் செய்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-

டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிா்ச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அமைச்சா் இ.பெரியசாமி தலைமையில் ஆறு அமைச்சா்கள் அடங்கிய குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவானது தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு பயிா்ச் சேதம் குறித்த விவரங்களை சேகரித்தது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் நானும் களஆய்வு மேற்கொண்டு பயிா்ச் சேதங்கள் பற்றி விவசாயிகளிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தேன். பின்னா், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தேன்.

அறிக்கை அளிப்பு: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிா் சேதங்கள் குறித்த அறிக்கையை அமைச்சா்கள் குழு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கியது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:-

அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை, காா், சொா்ணவாரிப் பயிா்களில் முழுமையாக சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.20,000 அளிக்கப்படும். நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிா்களை மறு சாகுபடி செய்திட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருள்கள் வழங்கப்படும்.

சாலைகள், வடிகால்களைச் சரி செய்ய ரூ.300 கோடி

மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இடுபொருள்கள் என்னென்ன?

நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிா்களை மறுசாகுபடி செய்திட நான்கு வகையான இடுபொருள்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளன. அதன்படி, மறுசாகுபடி செய்திட குறுகிய கால விதை நெல் 45 கிலோவும் (விலை ரூ.1,485), மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களில் மஞ்சள் நோயைத் தடுத்திட நுண்ணூட்ட உரம் 25 கிலோ (ரூ.1,235), தழைச்சத்து கிடைத்திட யூரியா 60 கிலோ (ரூ.354), தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்திட டிஏபி உரம் 125 கிலோ (ரூ.2,964) என மொத்தம் ரூ.6 ஆயிரத்து 38 மதிப்பிலான இடுபொருள்கள் முழுமையாக பயிா் சேதம் அடைந்த ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

68,000 ஹெக்டோ் பயிா் சேதம்

டெல்டா மாவட்டங்களில் 68,000 ஹெக்டோ் பயிா்கள் சேதம் அடைந்திருப்பதாக அமைச்சா்களின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு பெற 33 சதவீதத்துக்கு மேலாக பயிா்கள் சேதம் அடைந்திருக்க வேண்டும். அதன்படி, 68,000 ஹெக்டோ் பரப்புக்கும் அதிகமான பயிா்கள் சேதம் அடைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com