பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் நாளை வெளியீடு

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெள்ளிக்கிழமை (நவ.19) வெளியிடப்படும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்


திருச்சி: பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெள்ளிக்கிழமை (நவ.19) வெளியிடப்படும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதுகுறித்து திருச்சியில் அவர் மேலும் கூறியது:

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். பணிமாறுதலின்போது ஆசிரியர்களுக்கு பணிநிமித்தம் குடும்பத்தைப் பிரிந்துள்ள சிரமங்கள் கவனத்தில் எடுக்கப்படும். 

குறிப்பாக வயதான பெற்றோர், பச்சிளம் குழந்தைகளை உடனிருந்து கவனித்துக் கொள்ளும் சூழல் இருந்தால் பரிசீலிக்கப்படும்.

சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் முடிவுக்கு வந்தால் அந்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் திமுக அரசு உறுதி செய்யும். நவம்பரில்தான் இந்தக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த காலத்துக்குள் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவேதான் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறுகின்றன. 

அடுத்தாண்டு கரோனா குறைந்து வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும்போது சனிக்கிழமை வேலைநாள் என்பது தளர்த்தப்படும். 

வருங்காலங்களில் பள்ளிகள் தொடங்கும்போது முதலில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கெனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. 

பள்ளிகளை திறப்பதற்கு முன் வகுப்பறைக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பெய்யும் மழையால் பிரத்யேக ஆய்வு செய்து அறிக்கையளிக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்,  பொதுப்பணித் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் சர்ச்சைக்குள்ளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்தால் அவர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம். டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்திலும் பயிர்ச் சேதம் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தால் அரசிடம் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றார் அமைச்சர்.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com