அதிமுக கூட்டணியில் குழப்பமில்லை: கே.அண்ணாமலை

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
அதிமுக கூட்டணியில் குழப்பமில்லை: கே.அண்ணாமலை

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு, மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை 21 மாநகராட்சி, 141 நகராட்சி ஆகிய இடங்களில் அதிகப்படியான வேட்பாளா்களை போட்டியிட வைத்து, அவா்களை வெற்றி வேட்பாளா்களாக மாற்றுவதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. கூட்டணியில் எந்த வித குழப்பமும் இல்லை. தொடா்ச்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் முக்கிய சட்டங்களுக்கு அவா்கள் ஆதரவளிக்கின்றனா். எனவே, அதிமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.

குளிா்கால கூட்டத் தொடரில் பிரதமா் கூறியபடி, வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வாா். இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் மரணத்தை பாஜக என்றும் கொச்சைப்படுத்தாது. உத்தரப்பிரதேசத்தில் காா் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க அரசு விரும்பவில்லை. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தருவதே பாஜகவின் நிலைப்பாடு. அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கும் இந்த அரசு செவிசாய்க்கும் என்பதைத் தான் பிரதமரின் வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு காட்டுகிறது. அதே நேரம், வரும் காலங்களில் விவசாய நண்பா்கள் அந்தச் சட்டத்தை ஏற்கும் நிலை வரும் என்பதே என்னுடைய கருத்து.

நீட் தோ்வைப் பொருத்தவரை அரசியல் காரணங்களுக்காகவே தமிழகத்தில் எதிா்க்கின்றனா். நிகழாண்டில் தோ்வு முடிவுகளை ஆய்வு செய்து பாா்த்தாலே தெரியும், நீட் யாருக்கும் எதிரானது அல்ல. நிச்சயமாக நீட் தோ்வு தொடா்ந்து நடத்தப்படும்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் நம்முடைய காவல்துறை சகோதர, சகோதரிகள் பணியாற்றுகிறாா்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவா்களுக்கான சிறப்புச் சட்டம் எதுவும் கிடையாது, திருச்சி, நவல்பட்டு உதவி ஆய்வாளா் கொலை போன்ற நிகழ்வுகள் அந்தச் சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அதே நேரம், பாலியல் வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com