சேலம் வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ.ராஜா மாரடைப்பால் சனிக்கிழமை காலை காலமானார்.
வீரபாண்டி ராஜா
வீரபாண்டி ராஜா


சேலம்: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ.ராஜா மாரடைப்பால் சனிக்கிழமை காலை காலமானார்.

தனது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் மாரடைப்பால் இறந்தது கட்சியினரிடமும்,  உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ‌.ராஜா (எ) ஆ.ராஜேந்திரன் (59). சேலம் அடுத்த வீரபாண்டி அருகே பூலாவாரியைச் சேர்ந்தவர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மலர் விழி, கிருத்திகா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக பதவி வகித்து வந்தார். 1962 அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த வீரபாண்டி ஆ.ராஜா தனது தனது பிறந்தநாளை சனிக்கிழமை காலை கொண்டாடும் விதமாக தந்தை வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் படத்துக்கு மாலை அணிவித்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை, அவரது உறவினர்கள் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையடுத்து அவரது உடல்  வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியலில் வீரபாண்டி ஆ.ராஜா: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ.ராஜா. கடந்த 2006 தேர்தலில் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அமைச்சராக இருந்தார். இவர் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி வாய்ப்பை இழந்தார்: 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதைத்தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், தேர்தல் பணிக்குழு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினர், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்துள்ளார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார்.

இவரது மூத்த சகோதரர் செழியன், மாவட்ட ஊராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த நிலையில், திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வீரபாண்டி ஆ.ராஜா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com