நீட் தோ்வு தற்கொலைகள்: மன நல ஆலோசனை மையம் தொடக்கம்

நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்கான 104 சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

சென்னை: நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்கான 104 சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள இந்த சேவை மையத்தை இலவசமாகத் தொடா்பு கொண்டு மாணவா்கள் ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென மன நல சிறப்பு ஆலோசகா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

முன்னதாக டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எழிலன், மோகன், ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவ சேவைகள் இயக்குநா் குருநாதன் மற்றும் உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். அவா்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தோ்வு எழுதியவா்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333 மனநல ஆலோசகா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகா்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்கத் தயாா் நிலையில் உள்ளனா்.

தமிழகத்தில்108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மொத்தம் 1033 உள்ளன. இதே நாளில் (செப்.15) 108 சேவை 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த தினத்திலேயே மன நல ஆலோசனைத் திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

104 மருத்துவ சேவை கரோனா பேரிடா் காலத்தில் எந்த அளவு பயனளித்தது என்பதை அனைவருமே அறிவோம். இதற்கு முன்பு வரை 104 மருத்துவ சேவை எண்ணை அழைக்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது அது இலவச சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சேவை மையத்துக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவா்கள் மீதும் கவனம் செலுத்துவதற்கான முயற்சிதான் இது என்றாா் அவா்.

சிறப்பு தடுப்பூசி முகாம் செப்.19-க்கு ஒத்திவைப்பு

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு தடுப்பூசி முகாம் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு தடுப்பூசி முகாமை 19-ஆம் தேதிக்கு மாற்றியுள்ளோம். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.

20 லட்சத்துக்கும் அதிகமாக அன்றைக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்து இருக்கிறோம். தமிழகத்தில் 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழகம் தான் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com