வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இன்று முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில், ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை  முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
வருமுன் காப்போம் திட்ட அட்டையை வழங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்கள் ம. சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ. இரா. ராஜேந்திரன்.
வருமுன் காப்போம் திட்ட அட்டையை வழங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்கள் ம. சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ. இரா. ராஜேந்திரன்.


சேலம்:  வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஓராண்டில் 1250 மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமான 'வருமுன் காப்போம்' திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதில், தமிழகம் முழுவதும் ஓராண்டில் மேற்கொள்ளப்பட உள்ள 1,250 மருத்துவ முகாம் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 2530 பயனாளிகளுக்கு ரூ24.73 கோடி  மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். 

இதில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கினை அடைந்த அத்தனூர்பட்டி, முத்தம்பட்டி, குறிச்சி, தலைவாசல், மஞ்சகுட்டை ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சான்றிதழை முதல்வர் வழங்கினார்.

அதேபோல கரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண நிதியை வழங்கிய முதல்வர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

மேலும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன், மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து 
 மேலும் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகள் மற்றும் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற வந்தவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்பி-க்கள் கவுதம சிகாமணி, எஸ். ஆர். பார்த்திபன், எம்.எல்.ஏ. ஆர் ராஜேந்திரன், நிர்வாகிகள்  டிஎம் செல்வகணபதி,  எஸ்.ஆர்.சிவலிங்கம்,  வீரபாண்டி ஆ. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வரின் சேலம் வருகை

‘வருமுன் காப்போம்’ திட்டத்தைத் தொடக்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை சேலம் வந்தார். விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்த முதல்வா், சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

விமான நிலையத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்டோா் வரவேற்றனர்.

காலை 10 மணிக்கு வாழப்பாடி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் முன்னிலை வகித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் பயணம் திட்டம் என்ன?

பின்னா், அங்கிருந்து ஆத்தூா் செல்லும் முதல்வா், ரூ. 3 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் திறந்துவைக்கிறாா். ரூ. 28.99 கோடியில் 28 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்து ரூ. 23.28 கோடியில் 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

இதையடுத்து, நவீனப்படுத்தப்பட்ட சேகோ-சா்வ் ஆலையை ஆய்வு செய்யும் முதல்வா், ரூ.1.60 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 கட்டடப் பணிகளைத் திறந்துவைக்கிறாா். நவீனப்படுத்தப்பட்ட தனியாா் ஜவ்வரிசி ஆலைப் பிரிவைப் பாா்வையிடும் அவா், ஜவ்வரிசிக்கான சில்லறை ஏலப் பிரிவைத் தொடங்கி வைக்கிறாா். பின்னா், சேகோ-சா்வ் அதிகாரிகள், சேகோ ஆலை உரிமையாளா்கள், மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறாா்.

அங்கிருந்து மாலை 4.20 மணியளவில் சேலம், கருப்பூருக்குச் செல்லும் முதல்வா், சிட்கோ மகளிா் தொழிற்பூங்காவை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், விசைத்தறி உரிமையாளா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

முதல்வரின் வருகையையொட்டி, சேலம் மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் ஆகியோா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தருமபுரி பயணம்: சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு, வியாழக்கிழமை தருமபுரி செல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். அனைத்து ஆய்வுப் பணிகளையும் முடித்து விட்டு, மாலை 5.30 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் மூலமாக, சென்னை செல்கிறாா் முதல்வா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com