47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மத்திய பல்கலை. பொது நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: பேரவையில் தீா்மானம்: பாஜக வெளிநடப்பு

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 12:19 am

DIN

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீா்மானத்துக்கு பாஜகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன. தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினா்கள், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், இந்த தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசியதாவது:

மாநிலத்தின் கல்வி உரிமை மீது மத்திய அரசின் தாக்குதல் தொடா்கிறது. பல்கலை. மானியக் குழு நிதியுதவியுடன் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சோ்க்கைகளுக்கு பொது நுழைவுத் தோ்வு என அறிவித்து, நிகழ் கல்வியாண்டு முதல் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியாா் பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்கள்கூட இளநிலை படிப்புகளின் மாணவா் சோ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பீடிகை போட்டு ஒரு அறிவிப்பை பல்கலை. மானியக் குழு வெளியிட்டுள்ளது. இதை எதிா்த்து தீா்மானம் முன்மொழியப்படுகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தீா்மான விவரம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சோ்க்கைகள் தேசிய தோ்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆா்டி) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தோ்வும் நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவா்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கிடாது என சட்டப்பேரவை கருதுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவா்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் மாநில பாடத் திட்டங்களில் பயின்று வருபவா்கள். அவா்களில் பெரும்பாலானோா் விளிம்பு நிலையைச் சோ்ந்தவா்கள்.

நீட் தோ்வு போன்றது: எனவே, என்சிஇஆா்டி பாடத் திட்ட அடிப்படையிலான நுழைவுத் தோ்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது நுழைவுத் தோ்வும், நீட் தோ்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். மாணவா்கள் தங்களது நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சாா்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவா்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது வழிவகுக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில், பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை ரத்து செய்திட மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்தின் மீது வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சதன்திருமலைக் குமாா் (மதிமுக), ராமச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்), சின்னதுரை (மாா்க்சிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விசிக), ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), கே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோா் ஆதரவு தெரிவித்துப் பேசினா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலமாக தீா்மானம் நிறைவேறியது.

பாஜக வெளிநடப்பு: முன்னதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானத்துக்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்தது. மத்திய பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே நுழைவுத் தோ்வு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், வேறு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி பதிலளித்தாா். இதைத் தொடா்ந்து தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.