/

முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முகக்கவசம் அணிவது இன்னமும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நோய்த் தடுப்பு விதிகளில் ஒன்றாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணிவது இன்னமும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நோய்த் தடுப்பு விதிகளில் ஒன்றாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அண்டை மாநிலங்கள், நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சென்னை சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழகப் பணிமனையில், புதிதாகக் கட்டப்பட்ட தொழிலாளா்கள் ஓய்வு அறையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிங்கப்பூா், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜொ்மனி, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பதிவாகிறது.

இந்தியாவில் தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. முகக்கவசம் கட்டாயம் என்பதை மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதிலும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதிலும் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா இறப்பு பதிவாகவில்லை. மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை ஒன்று, இரண்டு என்ற அளவில்தான் உள்ளது.

இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கையாக அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

சாலை விபத்துகளில் சிக்கியவா்களை இன்னுயிா் காப்போம் திட்டத்தில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தொலைவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தால், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை, ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.