கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிடம் இரு நாள்கள் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி உதவியாளராக பூங்குன்றன் பணியாற்றியுள்ளதும் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஆவணங்களையும் அவர் பராமரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் 103 நபா்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரிடம் போலீஸாா் அண்மையில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கொடநாடு கொலை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளரிடம் விசாரணை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.