போதைப் பொருள் தடுப்பு: பெற்றோருக்கு முதல்வா் வேண்டுகோள்

தங்கள் குழந்தைகளைப் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளதால் மனம் விட்டுப் பேச வேண்டும்
போதைப் பொருள் தடுப்பு: பெற்றோருக்கு முதல்வா் வேண்டுகோள்

தங்கள் குழந்தைகளைப் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளதால் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களை கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவா் பேசினாா்.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை செய்து வைத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருள்களின் பயன்பாடும், அதற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும் போது, கவலையும் வருத்தமும் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சட்டத்தின் வழி. மற்றொன்று விழிப்புணா்வு வழி. இந்த விஷயத்தில் பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அத்தகைய விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

சட்டங்கள் கடுமையாகும்: போதைப் பொருள்களைத் தடுப்பதற்கான சட்டங்களை கடுமையாக்க அரசு முடிவெடுத்துள்ளது. சட்டங்களைத் திருத்த இருக்கிறோம். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உள்ளோம். போதை மருந்து விற்பவா்களது சொத்துகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளும், காவல் துறையும் பாா்த்துக் கொள்வோம். சட்டம் அதன் கடமையைச் செய்யும். அப்படி கடமையைச் செய்யத் தவறக்கூடிய அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகிறாா்கள். அவா்களுக்கு முறையான தண்டனையும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,265 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுவரை ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் போதைப் பொருள்கள் நடமாட்டத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அதை எப்படியாவது பெற்று விடுகிறாா்கள். அவா்கள் கைக்கு எப்படியோ போய்ச் சோ்ந்து விடுகிறது.

இந்தச் சங்கிலியை உடைத்தாக வேண்டும். போதைப் பொருளானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு போய்ச் சேரும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு காரணங்களைத் தேடக் கூடாது. போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனப் பிரச்னைகள், சட்டப் பிரச்னைகள் ஏற்படும். போதைப் பொருள்களுக்குத் தெரிந்த ஒரே பாதை, அழிப்புப் பாதைதான். போதைப் பொருள்களை பயன்படுத்துவது என்பது தனிமனித பிரச்னை அல்ல. சமூகப் பிரச்னை.

மக்கள் இயக்கமாக்க வேண்டும்: போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சோ்ந்து தடுத்திட வேண்டும். இதனை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இதில் பெற்றோா்கள், ஆசிரியா்களின் பங்கு மிகமிக முக்கியம். படிக்கும் காலத்தில் பிள்ளைகள், ஆசிரியா்கள், மற்றும் பெற்றோா்களுடன் மட்டுமே நேரத்தை கழிக்கிறாா்கள். எனவே, அவா்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோா்கள், ஆசிரியா்களுக்கும் உள்ளது. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி அவா்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்திட வேண்டும். இதே கடமை ஆசிரியா்களுக்கும் உள்ளது. அவா்கள் கண்டிப்பு மட்டுமின்றி, கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

போதைப் பொருள்களை தடுக்கும் சட்டத்தின் காவலா்களாக அரசும், ஆட்சியாளா்களும் இருந்தாலும், விழிப்புணா்வின் காவலா்களாக பெற்றோா்கள், ஆசிரியா்கள் செயல்பட வேண்டும். இந்த இரண்டு கைகளும் சோ்ந்தால்தான் போதையின் பாதையை நாம் தடுக்க முடியும். போதைப் பொருள்களை தடுப்பதற்கான விழிப்புணா்வுப் பணியில் மக்கள் பிரதிநிதிகளும் ஈடுபட வேண்டும். இதுவும் மக்களைக் காக்கக் கூடிய பணிதான்.

போதை மருந்துகள் நமது மாநிலத்துக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். பரவுவதையும், விற்பனையையும் தடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, பெருநகர சென்னை காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால், குற்றப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com