
தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (ஆக.12) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. கடந்த பிப்ரவரி, மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக தனியார் பால் விற்பனை விலை நாளை வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்நிலையில், தனியார் பால் நிறுவனமான சீனிவாசா பால் நிறுவனம் வியாழக்கிழமை (ஆக.11) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
ஹட்சன் நிறுவனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் (ஆக.12) முதல் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் பால் சார்ந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் விரோத நடவடிக்கையாக பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம், தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அடிக்கடி தன்னிச்சையாக தனியார் நிறுவனங்கள் தனியார் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.