பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்: நூலக செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அன்பில் மகேஷ்!

தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on
Updated on
2 min read

திருச்சி: தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்து, பள்ளி மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு விழா சிறப்புரையாற்றினார்.

பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:
பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலி திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8 , 9-10 , 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம், அதை வைத்து ஓவியம் வரையலாம், நாடகம் நடத்தலாம், கலந்துரையாடல் செய்யலாம். 

நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும். இவற்றில் சிறந்த மாணவர்கள் படைப்புகளைத் தந்த தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம். 

திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாசிப்பு இயக்கம் தொடக்க விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

நடக்கவிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முகாமில் பங்கேற்பார்கள். இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

இந்நாள்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 


முகாமில், கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில் வெல்வோர் ‘அறிவுப் பயணம்‘ என்கிற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படும். இந்தப் பயணத்தில் உலகப் புகழ்பெற்ற நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் போன்றவற்றைக் காணலாம். 

மேலும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நூலக செயலி திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் உலக அறிவை பெறலாம் என அன்பில் மகேஷ் கூறினார். 

இவ்விழாவில், ஆட்சியர் மா. பிரதீப்குமார் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவள்ளி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com