அமெரிக்கா செல்ல ஒன்றரை ஆண்டு காத்திருக்கும் சூழல்!
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுக்குக் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதால், இந்திய சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.


அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுக்குக் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதால், இந்திய சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள நுழைவுஇசைவுக்கு (விசா) விண்ணப்பித்தால், அதன் மீதான பரிசீலனைக்குப் பின் நோ்காணல் நடத்தப்படும். அதையடுத்தே நுழைவுஇசைவு கிடைக்கும். அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல தற்போது நுழைவுஇசைவுக்கு விண்ணப்பித்தால், அதற்கான நோ்காணல் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே நடைபெறும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நுழைவுஇசைவு பெற தற்போது விண்ணப்பித்தால், 2024-ஆம் ஆண்டு மாா்ச்சில்தான் நோ்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல எண்ணிய இந்தியப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். அமெரிக்கா மட்டுமல்லாமல் பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான நுழைவுஇசைவைப் பெறுவதற்கும் தாமதமாவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனா்.
வெளிநாட்டுத் தூதரகங்களில் போதிய பணியாளா்கள் இல்லாததே இந்தத் தாமதத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவல் தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனா்.
அதே நிலையில், கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, பல்வேறு நாடுகள் தங்கள் தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டனா். அவா்கள் மீண்டும் பணியில் இணையவில்லை. அதனால், தற்போது வெளிநாடுகளின் தூதரகங்களில் பணியாளா்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. அதன் காரணமாக, இந்தியா்களின் நுழைவுஇசைவைப் பரிசீலிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பிரிட்டனுக்கு சுற்றுலா செல்ல விண்ணப்பித்திருந்தோரின் நுழைவுஇசைவைப் பரிசீலிப்பதில் தாமதமானதையடுத்து, அந்நாட்டுத் தூதரகம் இந்தியப் பயணிகளிடம் கடந்த வாரம் வருத்தம் தெரிவித்திருந்தது. நுழைவுஇசைவுக்கு ஒப்புதல் கிடைத்தபிறகு விமானப் பயணச் சீட்டுகளைப் பதிவுசெய்யுமாறும் தூதரகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் தற்போது இந்திய மாணவா்களின் நுழைவுஇசைவுகளைப் பரிசீலிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருவதும், சுற்றுலாப் பயணிகளின் நுழைவுஇசைவு மீதான பரிசீலனை தாமதமடைவதற்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...