வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நமது கடமை: தோல் உற்பத்தித் துறை மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘இயற்கை வளங்களின் பாதுகாப்பை நமது கடமைகளில் ஒன்றாக ஒவ்வொருவரும் உணர வேண்டும்’ என்று தோல் உற்பத்தித் துறை மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 8:39 pm

DIN

‘இயற்கை வளங்களின் பாதுகாப்பை நமது கடமைகளில் ஒன்றாக ஒவ்வொருவரும் உணர வேண்டும்’ என்று தோல் உற்பத்தித் துறை மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளா்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும் என்றும் அவா் கூறினாா்.

தமிழக அரசின் தொழில் துறை சாா்பில் காலணிகள், தோல் பொருள்கள் உற்பத்தி தொடா்பான மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, முதல்வா் ஸ்டாலின் ஆற்றிய உரை: ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், ஏழாவது முறையாக முதலீட்டாளா் மாநாடு இப்போது நடைபெறுகிறது. தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளா்வதும் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு அடையாளம். தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது.

தமிழக அரசைப் பொருத்தவரை, எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும்; அவ்வாறு அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதனை மனதில் வைத்தே தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதி மக்களின் தனிநபா் வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரமும் வளா்ச்சி அடையும்.

புதிய கொள்கைகள்: எந்தத் துறையாக இருந்தாலும், அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே பல்வேறு தொழில் கொள்கைகள் வெளியிடப்பட்ட நிலையில், பசுமை ஹைட்ரஜன், எத்தனால், திருத்தப்பட்ட மின் வாகனம், திருத்தப்பட்ட வான்வெளி மற்றும் பாதுகாப்பு சாா்ந்த கொள்கைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

தமிழ்நாடு தொழில் கொள்கையின் கீழ் வழங்கப்படும் ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள், ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் விரைவில் வெளியிடப்படும். எந்த முதலீட்டுச் சூழலுக்கும் அரசு தயாராக உள்ளது. அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்து வருகிறது.

தோல் அல்லாத காலணி: தோல் அல்லாத காலணிகள் துறை மீது கவனம் செலுத்தவும் அரசு முயன்று வருகிறது. தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளா்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கிடும். மேலும், தோல் அல்லாத உற்பத்திப் பொருள்கள்தான் சந்தையில் 70 சதவீதத்துக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இயற்கை வளங்களின் பாதுகாப்பை நமது கடமைகளில் ஒன்றாக ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சிப்காட், சிட்கோ மற்றும் பொது-தனியாா் கூட்டு முயற்சிகள் மூலம் ஆயத்த தொழில் கூடங்களில் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்கவுள்ளது. காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தி விநியோகச் சங்கிலியில் இருக்கும் இடைவெளிகளை ஆய்வு செய்து, உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

மூலப்பொருள்கள் தயாரிப்பு: ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கா் பரப்பில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் துறைக்கான மூலப்பொருள்கள் சீனாவில் இருந்தே இறக்குமதியாகின்றன. ராணிப்பேட்டை பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை நாமே தயாரிக்க முடியும்.

உலகச் சந்தையில் ‘மேக் இன் தமிழ்நாடு’ முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற லட்சியத்தை இந்தத் திட்டம் நிறைவேற்றும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

மாநாட்டில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், முதல்வரின் செயலா்கள் த.உதயச்சந்திரன், அனுஜாா்ஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி, சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் அருண்ராய், தோல் ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரூ.2,250 கோடி முதலீடு: 37,000 பேருக்கு வேலை- 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
காலணி மற்றும் தோல் உற்பத்தி தொடர்பான 5 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தங்களின் மூலமாக ரூ.2,250 கோடி ஈர்க்கப்படும். 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலணி மற்றும் தோல் உற்பத்தித் துறை மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், ஐந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் நிறுவனம் காலணி உற்பத்தியில் செய்யவுள்ள ரூ.1,200 கோடி   முதலீட்டால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். 
ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்புப் பிரிவில் அதே நிறுவனம் செய்யவுள்ள ரூ.500 கோடி முதலீட்டால் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
கோத்தாரியின் எஸ்இஎம்எஸ் குழுமம் தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் செய்யவுள்ள ரூ.300 கோடி  முதலீட்டால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேகன் குழுமமானது தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரண உற்பத்தியில் ஈடுபட உள்ளது. இதற்காக செய்யவுள்ள ரூ.150 கோடி முதலீட்டால், 1,200 பேருக்கு வேலை கிடைக்கும்.
வாக்கரூ நிறுவனம் தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் ரூ.100 கோடி செய்யவுள்ள முதலீட்டால் 1,250 பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக ரூ.2,250 கோடி முதலீடுகள் வழியாக 37,450 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்திக் கொள்கை: மாநாட்டில், காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்திக்கென தனித்த கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்தித் துறையில் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் கொள்கையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.