ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால்,ஐவர் பாணியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால்,ஐவர் பாணியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். இதனால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை, 46 ஆவது நாளாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம் மற்றும் கேரளம் மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயிலும், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது. 

இந்த நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 7000 கன அடி நீரும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து நொடிக்கு 19,783 கன அடி என மொத்தம் இரண்டு அணைகளில் இருந்து உபரி நீர் 26,783 கன அடியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கர்நாடக காவிரி கரையோரப் பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கலில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் பூட்டப்பட்டுள்ள பரிசல் துறை.

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் இரு மாநில காவிரி கரையோர மீன் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் தடைவிதித்துள்ளார்.

இதன் மூலம் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை, 46 ஆவது நாளாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நிறுவனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com