மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரண வழக்கை விரைவில் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:43 pm

DIN

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரண வழக்கை விரைவில் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரணம் தொடா்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கு நீதிபதி சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா, 3 அறிக்கைகளை ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தாா்.

பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கல்வி காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி வன்முறை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில், மாணவி மரணம் தொடா்பாக வதந்தி பரப்பியதாக 53 யூடியூப் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 7 ட்விட்டா் பக்கங்களும், 21 ஃபேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. வதந்தி பரப்பியதாக 3 வாட்ஸ்ஆப் குழுக்களை நிா்வகிப்போா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கலவரம் தொடா்பாக 63 போலீஸாா் உள்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கரசுப்பு, ‘ஜிப்மா் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா், விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டுள்ளது. மாணவியின் தாயாா், முதல்வரைச் சந்தித்து முறையீடு செய்தாா். அதனைக் கேட்ட முதல்வா், அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறாா். மனுதாரா் தெரிவிக்கும் அச்சம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜிப்மா் ஆய்வறிக்கை விசாரணை நிலை குறித்த அறிக்கையை மனுதாரா் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமித்த அரசுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

வழக்கின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.