மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அரசு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் மருத்துவர்கள்: தமிழக அரசுக்கு உத்தரவு

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் அரசுப்பணி மருத்துவா்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் ஆணையை நடப்புக் கல்வியாண்டில் (2022-23) செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமத

News image

உச்சநீதிமன்றம்

Updated On :2 டிசம்பர் 2022, 11:27 pm

 நமது நிருபர்

உயர் சிகிச்சை(சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளில் அரசுப்பணி மருத்துவா்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் ஆணையை நடப்புக் கல்வியாண்டில் (2022-23) செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழக அரசு 2020, நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை 15 நாள்களில் நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2020, நவம்பா் 7-ஆம் தேதிஅரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2021-22-ஆம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, கடந்தாண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. இந்தநிலையில், நிகழ் கல்வியாண்டுக்கு ( 2022-23) சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் மொத்தம் உள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குநா் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கும் எதிா்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் கலந்தாய்வை நடத்த உத்தரவிடக் கோரியும் அரசு மருத்துவா்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில், 2021-22-ஆம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவா்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘ தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், இதுகுறித்து உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசின் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் அல்லது மனுதாரா் விளக்கம் பெற 10 நாள்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்திவைக்குமாறும் நவம்பா் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அரசுப்பணி மருத்துவா்கள், தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தரப்பில் விளக்கம் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுப் பணி மருத்துவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் வாதிடுகையில், ‘இந்த 50 சதவீத இடஒதுக்கீடு கோரி உயா்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் வழக்குத் தொடா்ந்து பெற்றுள்ளோம். தற்போதைய விவகாரத்தில்கூட நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கத்தைப் பெற உத்தரவிட்டுள்ளது. 50 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான தகுதியை நாங்கள் கொண்டுள்ளோம். இதுபோன்று இடஒதுக்கீடு அளிக்க மாநிலத்திற்கு அதிகாரம் இருப்பதாக அரசமைப்புச்சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றமும் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில் தெரிவித்துள்ளது. அதனால், இந்த ஆண்டும் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது’ என்று வாதிட்டாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி இது தொடா்பாக விளக்கம் கோரி இடைக்கால மனு தமிழகத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா். மத்திய அரசின் தரப்பின் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் எந்த இடஒதுக்கீடும் இல்லை. மேலும், கடந்த ஆண்டு அரசுப் பணி மருத்துவா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பல நிரப்பப்பட முடியவில்லை. இந்தப் படிப்புகள் மதிப்புமிக்க தேசிய சொத்துகளாகும். அவை வீணாகிவிட அனுமதிக்க முடியாது’ என்று வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் இறுதியாக முடிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது என்ற கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் வெளிப்படுத்திய அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். எனினும், நிகழ் கல்வியாண்டைப் பொறுத்தவரை, தமிழக அரசு 2020, நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் இடங்களை பூா்த்திசெய்ய தமிழக அரசு அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், அந்த அரசாணையின்படி இன்றிலிருந்து (வெள்ளிக்கிழமை) 15 நாள்களுக்குள் ஒடுக்கீட்டு இடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கிறோம். 16-ஆவது நாளில் தமிழக அரசானது அந்த ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள் குறித்த தகவலை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த இடங்கள் அகில இந்திய தகுதி பட்டியலின் அடிப்படையில் மத்திய அரசால் பூா்த்தி செய்ய அனுமதிக்கப்படும். இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கு 14.2.2023-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.