ஆன்மிகத்துடன் சுதந்திர வேட்கையை உருவாக்கியவர் ஸ்ரீ அரவிந்தர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
"ஆன்மிக சக்தியுடன் சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் ஸ்ரீ அரவிந்தர்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


"ஆன்மிக சக்தியுடன் சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் ஸ்ரீ அரவிந்தர்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார். அரவிந்தரின் நினைவாக நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் வாழ்ந்த அரவிந்தரின் நினைவைப் போற்றும் வகையில் நினைவு நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு புதிய சக்தியையும், உணர்வையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அளிக்கும். அரவிந்தரின் யோக சக்தி என்பது சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகவும் உள்ளது.
1893-ஆம் ஆண்டில் பல ஒற்றுமையான நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த ஆண்டில்தான் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆன்மிக உரையாற்றினார். அதே ஆண்டில்தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று போராடி சாதனை படைத்தார்.
அரவிந்தரும் பிரிட்டனில் படிப்பை முடித்துக் கொண்டு 1893-ஆம் ஆண்டில்தான் இந்தியா திரும்பினார். அதன்படி, 1893-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உந்துதலை தரும் வகையில் அமைந்தது.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் தேச பக்தியாக அரவிந்தர் திகழ்ந்தார்.
அவர் வங்கத்தில் பிறந்தாலும், குஜராத்தி, வங்காளம் எனப் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். பிற மொழிகளையும் தமது தாய்மொழியைப் போல நேசித்தார். புதுச்சேரியில்தான் அவர் வாழ்நாளில் அதிக நாள்களைக் கழித்தார்.
அண்மையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இன்றைய இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறியும் வாய்ப்புக் கிட்டியது. அதன்படி, மொழியின் பெயரால் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.
அரவிந்தர் தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார். தேசத்தின் விடுதலைக்காக மட்டும் அவர் பாடுபடவில்லை; ஆன்மிக சக்தியை உயர்த்துவதே அவரது விருப்பமாக இருந்தது. எனவேதான், அவர் ஆன்மிக சக்தியுடன் கூடிய உறுதியான நிலையை சுதந்திர வேட்கையுடன் உருவாக்கி, அதன்மூலம் இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.
மனித நிலையிலிருந்து இறைநிலை வரையிலும் அவரைப் போற்றுகிறோம் என்றால், அதற்கு அவரது செயல்பாடுகளே காரணமாகும்.
அரவிந்தரின் பிறப்பு இந்தியாவுக்கு ஒரு சக்தியைக் கொடுத்தது. அவர் சிறையில் இருந்தபோது, மகாபாரதம், ராமாயணத்தைப் படித்து, அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தார். அவரை ஒடுக்குவதற்காக சிறையில் நடைபெற்ற முயற்சிகளை முறியடித்தார்.
இன்றைய பாரதத்தின் இளைஞர்கள் அரவிந்தரின் உணர்வுகளை பெற்று சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அவரது உணர்வுகளைத் தாங்கி இந்தியாவின் சவால்களை எதிர்கொள்வோம் என்றார் பிரதமர் மோடி.
உலகின் தலைமை குருவாக இந்தியாவை அடையாளப்படுத்தியவர் ஸ்ரீ அரவிந்தர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
"உலகின் தலைமை குருவாக இந்தியாவை அடையாளப்படுத்தியவர் ஸ்ரீ அரவிந்தர்' என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:
உலகின் தலைமை குருவாக இந்தியா விளங்குவதற்கான வழியைக் கூறியவர் ஸ்ரீ அரவிந்தர். அந்தவழிதான் புனித யோகமாகும். அதன்படியே கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய வழிகளை அவர் புனித யோகமாகக் காட்டினார்.
அவர் காட்டிய வழியின்படி, தொலைநோக்குப் பார்வையுடன் வரும் 25 ஆண்டுகள் உலகத்துக்கே இந்தியா வழிகாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். நாட்டில் "எல்லாருக்கும் எல்லாம்' என்னும் கருத்தை அடிப்படையாக கொண்டே தியான யோகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு இந்தியரும் தியானத்தில் ஈடுபட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றார் ஆர்.என்.ரவி.
புதுவை துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: புதுவையில் மகாகவி பாரதிக்கும், அரவிந்தருக்கும் இடையேயான நட்பு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் வழிகாட்டியாக அமைந்தது. உலகுக்கே பாரதம் தலைமை வகிக்க வேண்டும் என அரவிந்தர் விரும்பினார். எனவே, அவரது நினைவாக அஞ்சல் தலை, நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
அரவிந்தர் தேச விடுதலைக்காக மட்டுமல்ல, மனம் சுதந்திரமாக விளங்கவும் வழிகாட்டினார். அதன்படியே, தற்போது உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையிலும், அரவிந்தரின் கனவை பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார் என்றார் அவர்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது: இந்தியாவை முன்னேற்ற ஆன்மிக, கலாசார ரீதியில் அறிவார்ந்த வகையில் ஆன்மிக குருக்கள் தங்களது வாழ்வை அர்ப்பணித்தனர்.
அரவிந்தரின் தத்துவங்கள், கொள்கைகள் பாதுகாத்து போற்றத்தக்கவை. அவரது போதனைகள் நாட்டுக்கும், இளைஞர்களுக்கும் அவசியமானதாக உள்ளது என்றார்.
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அவரது நினைவாக நாணயம், அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டது பாராட்டுக்குரியது. புதுச்சேரி ஆன்மிக பூமியாகும். பல ஞானிகள் வாழ்ந்த, தற்போதும் வாழ்ந்துவரும் மண்ணாகும் என்றார்.
விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய சுற்றுலாத் துறை செயலர் உமா நந்தினி வரவேற்றார். அரவிந்தர்ஆசிரம அறக்கட்டளை நிர்வாகி ஜெயந்தி ரவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...