இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில, மாவட்ட அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடி, சிலம்பாட்டம் ஆகியன இடம்பெறும் எனவும், இந்தப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி, முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பாராம்பரிய விளையாட்டுகள் இடம்பெறுவதுடன், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்களை உள்ளடக்கி 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ரூ. 47.04 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான கோப்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.