மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்தி அலங்காரம் நடைபெற்றது.

News image
ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி. 
Updated On :23 டிசம்பர் 2022, 3:08 am

DIN

நாமக்கல்: ஆஞ்சனேய ஜெயந்தியையொட்டி, நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்தி அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில், 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சனேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை தரிசித்துச் செல்கின்றனர்.

இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டில் இன்று(வெள்ளிக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

Story image

இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடை மாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி,  உதவி ஆணையர் இரா.இளையராஜா  மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர். மேலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர்.    

நண்பகல் 12 மணியளவில் வடை மாலை அகற்றப்பட்டு, சுவாமிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலான சிறப்பு அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள நடைபெறுகின்றன.

ஆஞ்சனேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 200 பேர், இலவச தரிசன முறையில் 300 பேர் என 500 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுவாமிக்கு சாத்தப்பட்ட வடைகள் பொட்டலமிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட உள்ளன. ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, கட்டளைதாரர்களால் ஆங்காங்கே அன்னதானங்களும் வழங்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலைப்  பகுதி முழுமையாக  மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட போலீஸார்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.