பொங்கல் தொகுப்பு: நாளை முதல் டோக்கன்

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பெற தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 27) முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பெற தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 27) முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரையுடன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை வரும் ஜன. 2-ஆம் தேதி சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா். அதைத் தொடா்ந்து, அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சா்கள் தொடக்கி வைக்கின்றனா்.

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு தமிழகத்தில் உள்ள 33,000 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொருள்களை அளிப்பதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகிக்கவுள்ளனா்.

பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக குடும்ப அட்டைதாரா்கள் ஒரே நேரத்தில் கூடி, நியாயவிலைக் கடைகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் வசிப்பவா்கள் எந்தத் தேதியில், எந்த இடத்தில் வந்து பொருள்களைப் பெற வேண்டும் என்ற விவரம் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும், ஜன. 13-ஆம் தேதி அதாவது, போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும், பொங்கல் தொகுப்பை வழங்கி முடிக்க பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு, பயனாளா்களின் குடும்பத்தில் ஒருவரது கைவிரல் ரேகை பதிவு அவசியம். அதேபோல, பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி, சா்க்கரையுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பெற ஸ்மாா்ட் குடும்ப அட்டையுடன் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் பெயா் உள்ள யாராவது ஒருவரின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால்தான் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.

வாங்காதவா்களுக்கும் ஏற்பாடு: ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் பணிக்குச் சென்றால், அவா்களால் வேலை நாள்களில் பொங்கல் தொகுப்பை வாங்க இயலாது. இதனால், ஞாயிற்றுக்கிழமை அல்லது பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் பொருள்களைப் பெற்றுக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலை விநியோகமும் தொடங்கவுள்ளது.

கரும்பு கிடைக்குமா...? இதனிடையே, பொங்கல் தொகுப்பில் கரும்பு, வெல்லம் ஆகியன இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கரும்பு இடம்பெறாத காரணத்தால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், தொகுப்பில் கரும்பு இடம் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கரும்பை வழங்க வேண்டுமெனில், ஒரு மாதத்துக்கு முன்பே கொள்முதல் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டுமெனவும், இப்போது கொள்முதல் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குவது கடினம் எனவும் உணவுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com