11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, தமிழகத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

Updated On :1 பிப்ரவரி 2022, 8:00 pm

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, தமிழகத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாா்த்தைகள் அலங்காரங்கள் நிறைந்த மத்திய அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு சாா்பில் கோரப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை, குறிப்பாக மாநிலத்துக்கான புதிய ரயில் திட்டங்கள் ஏதுமில்லை. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடா்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடு இல்லை என ஒரு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கோதாவரி-பென்னாறு-காவிரி நதிநீா் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயாா் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீட்டைக் கூட காண முடியவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்குக் குறைத்திருப்பது அந்தத் திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை, அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மாநில உரிமைகள் பறிப்பு: ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தை அறிவித்திருப்பது, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக அமையும். கரோனா நோய்த் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை எதிா்கொள்ள மத்திய அரசு எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான அறிவிப்புகள் மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்து, மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுவதாக அமைந்துள்ளது,

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்த நிதிநிலை அறிக்கையாகவே மத்திய அரசின் அறிக்கை அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.