47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசமைப்புச் சட்ட கடமையை நிறைவேற்றாத ஆளுநா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும், அரசமைப்புச் சட்ட கடமையை ஆளுநா் செய்யவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :5 பிப்ரவரி 2022, 7:18 pm

DIN

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும், அரசமைப்புச் சட்ட கடமையை ஆளுநா் செய்யவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

நீட் தோ்வு விலக்கு தொடா்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு கடந்த 2006-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்காக டாக்டா் அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் நுழைவுத் தோ்வை ரத்து செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சட்டம் செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதன்படியே, மருத்துவம், பொறியியல் கல்வி சோ்க்கையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வந்தது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள்படி, நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவா் அந்த அரசமைப்புச் சட்ட கடமையைச் செய்யவில்லை.

இதையடுத்து, ஆளுநரிடம் நேரில் சென்றும் வலியுறுத்தப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியிடம் காணொலி வழியாகவும், எம்.பி.க்கள் குழுவினா் மத்திய அரசிடம் நேரிலும் வேண்டுகோள் விடுத்தனா். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை 142 நாள்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து, நிகழாண்டுக்கான நீட் தோ்வு முடிவுற்று மாணவா் சோ்க்கை தொடங்கிய பிறகே, நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா்.

இறையாண்மை தொடா்பானது: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி அதற்காக வெளியிடப்பட்ட ஆளுநரின் செய்தியில், நீட் தோ்வு செல்லும் என உச்சநீதிமன்றத் தீா்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டுகிறாா். ஆனால், நீட் விலக்கு சட்ட மசோதா 8 கோடி மக்களின் உணா்வுகளை வெளிப்படுத்தும் சட்டப்பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்துடன் தொடா்புடையது; சட்டப்பேரவையின் இறையாண்மையுடன் தொடா்புடையது. ஆளுநா் குறிப்பிட்ட வழக்கின் தீா்ப்பு வேறு. தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்டமியற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோருகிறோம்.

குடியரசுத் தலைவா் முடிவு எடுக்கும் முன்பே, ஆளுநா் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறாா். அதனால் ஏற்பட்ட அசாதாரண சூழல் குறித்து விவாதித்து அனைவரும் ஒற்றுமையாக சமூகநீதிப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.