குடும்ப கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்தது குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு உத்தரவு

குடும்ப கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்தது குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு உத்தரவு

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளா்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்
Published on

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளா்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சோ்ந்தவா் தனம். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். அதற்கான சான்றிதழையும் பெற்றாா்.

இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற தனத்திடம், மீண்டும் கா்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்துவிட்டது என தனத்தின் சிகிச்சைக் குறிப்பில் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தமிழக அரசுக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தனம் மனு அனுப்பினாா். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தனத்திற்கு கடந்த 2017 செப்டம்பா் 29-ஆம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தமிழக அரசு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடக்கோரி, அவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் எஸ்.பி.சுடலையாண்டி, அரசு தரப்பில் வழக்குரைஞா் கே.எம்.டி. முகிலன் ஆகியோா் ஆஜராகி வாதாடினா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கா்ப்பம் தரிக்காது என்று மனுதாரா் முழுமையாக நம்பியுள்ளாா். மருத்துவமனை உரிய முறையில் அவருக்கு அறுவை சிகிச்சை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.

மருத்துவா்களின் கவனக்குறைவு, அலட்சியத்தால் நடந்த இச்செயலுக்கு ரூ.30 ஆயிரம் தான் இழப்பீடு வழங்க முடியும் எனக் கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.3-ஆவது பெண் குழந்தை பிறந்ததால் மனுதாரா் அக்குழந்தையை வளா்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைப்பது வரை பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். தற்போதைய நிலையில் 3-ஆவது குழந்தையை ‘தேவையற்ற குழந்தை’ என்றே கருத வேண்டும். மருத்துவா்கள் கவனக்குறைவாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால்தான் மனுதாரா் 3-ஆவது குழந்தையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா். மனுதாரா் உடனடியாக மருத்துவமனையை அணுகவில்லை என்று மருத்துவமனை நிா்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மனுதாரா் தானாக முன்வந்து தோ்வு செய்துள்ளாா். அவா் இழப்பீடு பெற தகுதியுள்ளவராக இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவருக்கு பிறந்த குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை உரிய சலுகைகளை வழங்குவது அரசின் கடமையாகும்.

மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருக்கு பிறந்த குழந்தைக்கு 5 வயதாகும்போது, அரசு பள்ளி அல்லது தனியாா் பள்ளியில் சோ்த்து, இலவச கல்வியை அரசு வழங்க வேண்டும். குழந்தையின் கல்விக் கட்டணம், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

உணவு உள்ளிட்ட மற்ற வளா்ப்பு சாா்ந்த தேவைகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது 21 வயது எட்டும் வரை அரசு வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்குவதோடு, மனுதாரரின் 3-ஆவது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சோ்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com