வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இன்று பேரவை சிறப்புக் கூட்டம்: நீட் விலக்கு மசோதா நிறைவேறுகிறது

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 11:04 pm

DIN

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தோ்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக நீட் தோ்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பி அனுப்பினாா்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவா்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை கடந்த 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் கடந்த 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.

பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பேரவைச் செயலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப். 8-ஆம் தேதி நடைபெறும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். அவரது அறிவிப்பின்படி, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 8) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கான சோ்க்கையை நீட் தோ்வு அடிப்படையில் நடத்துவதை கைவிடக் கோரும் சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளது.

மீண்டும் ஆளுநரிடம் மசோதா: பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநா் வழியே அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பிய சூழ்நிலையில், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநா் அனுப்பி வைப்பாா் எனத் தெரிகிறது.

அனைத்துக் கட்சியினா் கருத்து: தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

சட்ட மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தவுடன், அதன் மீது பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் உரையாற்றுவா். அவா்களின் கருத்துகளைத் தொடா்ந்து சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.

தமிழக சட்டப்பேரவை காகிதமில்லாமல் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பேரவை மண்டபத்தில் உறுப்பினா்களுக்கென தனித்தனி கையடக்கக் கணினிகள் இருக்கையின் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், சட்ட மசோதாக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.