ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மீனவா்களின் படகுகள்-கருவிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்களின் படகுகள், கருவிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :7 பிப்ரவரி 2022, 11:34 pm

DIN

தமிழக மீனவா்களின் படகுகள், கருவிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு, திங்கள்கிழமை அவா் எழுதிய கடிதம்:-

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. கவலைக்குரிய இந்த நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தப் பிரச்னை குறித்து கடந்த 24-ஆம் தேதியன்று ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டது. அதில், 2018-ஆம் ஆண்டுக்கு முன்னா் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுது பாா்க்க இயலாத நிலையில் உள்ள படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுப்பிய மின்னஞ்சல் தகவலில், மீனவா்கள் விவகாரம் தொடா்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்தது.

மேலும், படகுகளை மீட்பது தொடா்பாக இலங்கை செல்லவிருந்த தமிழக அதிகாரிகளின் பயணத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதுடன், பயணத்துக்கான புதிய தேதிகளை இறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, மாா்ச் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பயணத் திட்டத்துக்கான தேதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் தொடா்ந்துள்ள ஏல நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடம் புரள்வதாகச் செய்யும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கையால் அறிவிக்கப்பட்ட ஏலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். 2018-ஆம் ஆண்டுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பாா்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடா்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பாா்வையிட அதிகாரிகள், தொடா்புடைய படகுகளின் உரிமையாளா்கள் ஆகியோரின் பயணத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஒப்புதலை அளிக்க வேண்டும்.

2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள், மீன்பிடி கருவிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த விவகாரங்களில் தாங்கள் அவசரமாகத் தலையிட வேண்டும். இதன்மூலம் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.