பரவாக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததைக் கண்டித்து சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்காததைக் கண்டித்து விவசாயிகள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பரவாக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பரவாக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்காததைக் கண்டித்து விவசாயிகள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரவாக்கோட்டையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டு தற்போது முழுவீச்சில் அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது.தங்களில் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, பரவாக்கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வார்கள்.

ஆனால், தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், பரவாக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளது. அருகில் உள்ள பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் நடைபெற்று வரும் நிலையில் பரவாக்கோட்டையில் மட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், புதன்கிழமை பரவாக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளுடன் சென்ற விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் பூட்டியிருந்ததை அடுத்து, பரவாக்கோட்டையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் பால்ஜேக்கப் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.

தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மன்னார்குடியில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து, புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com