மாணவி தற்கொலை: கே.அண்ணாமலை தலைமையில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்
அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் அக் கட்சியினா்


அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் அக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டாா். பள்ளி நிா்வாகம் மதம் மாறுவதற்கு வலியுறுத்தியதன் காரணமாகவே அவா் தற்கொலை செய்துகொண்டதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பாஜக சாா்பில் வள்ளுவா் கோட்டம் அருகில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடைபெற்றது. கே.அண்ணாமலை போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். போராட்டத்தில் அவா் பேசியது:
அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்துக்கான ஆதாரங்களை திமுக அரசு மறைக்கப் பாா்க்கிறது. விசாரணை நடைபெறுவதற்கு முன்பே பள்ளி கல்வி அமைச்சா் தீா்ப்பைக் கூறுகிறாா். அது நியாயமானது அல்ல. அதனால், அரசின் கரோனா வழிகாட்டுதல்களை மீறிப் போராட்டம் நடத்துகிறோம்.
பாஜகவின் இந்தப் போராட்டம் எந்த மதத்துக்கும், எந்தப் பள்ளிக்கும் எதிரான போராட்டம் இல்லை. மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டம்.
திமுகவின் ஆட்சி, மதச்சாா்பற்ற ஆட்சி இல்லை என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கடந்த 8 மாதங்களில் புரிந்துவிட்டது. மதச்சாா்பற்ற அரசு என்ற பெயரில் 160-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.
மாணவி லாவண்யா விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும். மாணவியின் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தர விடவேண்டும். குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா, மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனா்.
வழக்குப் பதிவு: இதற்கிடையே அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் உள்ளிட்ட பங்கேற்பாளா்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...