மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

மாணவியின் மறுஉடற்கூறாய்வின் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரி மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
Updated On :19 ஜூலை 2022, 7:15 am

DIN

புது தில்லி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவியின் மறுஉடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரி மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மறுஉடற்கூறாய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக், கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூறாய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பு மருத்துவரை உடன் இருக்க அனுமதிக்கக் கோரிய தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி, கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டதால் வன்முறையாக மாறி பள்ளி மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவியின் சடலத்தை மறுகூறாய்வு நடத்த உத்தரவிட்டார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின்போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோா் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறுஉடற்கூறாய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுப்பு
மாணவியின் சடலம் மறுகூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கவும், அதுவரை மறுகூறாய்வு உத்தரவை நிறுத்திவைக்கவும் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி சதீஷ்குமாா் முன் மாணவியின் தந்தை தரப்பு வழக்குரைஞா் மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரை மறுஉடற்கூறாய்வில் சோ்க்க வேண்டும் என முறையிட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

அப்போது, மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த தீா்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறுகூறாய்வை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா். இந்த கோரிக்கையை நீதிபதி சதீஷ்குமாா் நிராகரித்ததுடன், மறுஉடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.