அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
 
 மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதலவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே வால்பாறை, ஊட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள புளியங்கடை, செங்காடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன. 

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகளில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ரூ.1300 கோடியில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையின்றி மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. அதற்கு கணக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும்.  18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படும்.
 
கள்ளக்குறிச்சி பிரச்னையில் மாணவ-மாணவியருக்காக இப்போதைக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுக்கும் பணி கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 81 சதவீத மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். எங்களுடைய கவனம் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது உள்ளது. விரைவில் தனியார் கல்லூரியில் இந்த மாணவர்களுக்காக நேரடியாக பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் இதனை கவனிக்க தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
 
உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை ஒவ்வொரு வட்டாரங்களிலும் 2 மருத்துவர்கள் கவனிக்க உள்ளனர்.  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை சிற்றுண்டி திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கபட்டுள்ளார். காலை 7.30 மணிக்குள் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கிடைக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அதற்கான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் எப்போது தொடங்கும் என்பதை முதல்வர் அறிவிப்பார்.
 
வார விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கான 2 நாள்களை அவர்கள் அனுபவிக்க விட வேண்டும். தனியார் பள்ளிகள் அவர்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தி அழுத்தத்தைத் தரக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
 
தசைக்குறைபாடுள்ள மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி ஏதாவது ஒரு வகையில் மாணவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது மிகப்பெரிய முறைகேடு. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தமிழகம் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான வகுப்பறைகள் கூடுதலாக உருவாக்கப்படும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். 9 முதல் 12-ம் வகுப்புகளில் 9 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளனர். உள்கட்டமைப்பு, போதுமான ஆசிரியர் நியமனம் என்பது அரசின் கடமையாகும். 9,494 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டு இருந்தோம். கூடுதல் மாணவர் சேர்க்கையால் தற்போது 10,300-க்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.  

மடிக்கணினி கட்டாயம் வழங்கப்படும். கரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததால் கொடுக்க முடியவில்லை. 11 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி கொடுக்க வேண்டியுள்ளது என்று  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com