இந்தியாவை உளவு பார்க்க சீனா துடிப்பதும், அதற்கு இலங்கை உதவுவதும் இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர்மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து 5 நாள்கள் இந்திய நிலைகளை உளவு பார்க்க முயன்றன. இலங்கைக்கு கொடுத்த கடனை காரணம் காட்டி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் வளைத்து விட்ட சீனா, அங்கிருந்தும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. கடந்த திசம்பர் மாதத்தில் இலங்கைக்கான சீனத் தூதர் சென்ஹாங், யாழ்ப்பாணத்திற்கு சென்று, அங்கிருந்து படகு மூலம் இராமேஸ்வரத்தை ஒட்டிய இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை பயணித்து, இந்தியாவை உளவு பார்ப்பதற்கான உத்திகளை வகுத்துச் சென்றிருந்தார்.