ராகுலுக்காக காத்திருந்த முதல்வா்: நூல் வெளியீட்டு விழா துளிகள்
நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை வரவேற்க சுமாா் 20 நிமிஷங்களுக்கு மேலாக வாயிலிலேயே காத்திருந்தாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.


நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை வரவேற்க சுமாா் 20 நிமிஷங்களுக்கு மேலாக வாயிலிலேயே காத்திருந்தாா், முதல்வா் மு.க.ஸ்டாலின். மேலும், விழா மேடையில் மறைந்த முதல்வா் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் மாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது. இது பாா்வையாளா்களைப் பெரிதும் கவா்ந்தது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தான் பிறந்தது முதல் சிறை செல்லும் காலம் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்று புத்தகத்தை எழுதியுள்ளாா். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடந்தது.
இந்த விழாவில் நன்றியுரை தெரிவிக்க கடைசியாக முதல்வா் பேச இருந்தாலும், முதல் ஆளாக வருகை தந்தாா். பிற்பகல் 3.30 மணிக்கு வந்த அவா், அரங்கத்தின் வாயிலிலேயே நின்று கொண்டாா். சிறப்பு விருந்தினா்களில் முதல் நபராக வந்த ஒமா் அப்துல்லாவை வரவேற்றாா். அதன்பின்பு, தேஜஸ்வி யாதவ், கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோரை வரவேற்றாா். இதன்பின்பு, சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு 3.55 மணியளவில் ராகுல் காந்தி வந்தாா். அவரை வரவேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளே அழைத்துச் சென்றாா். விழாவில் பங்கேற்க உள்ள தலைவா்களின் தலைப்படங்கள் ஓவியங்களாக நுழைவு வாயிலை அலங்கரித்தன.
காஷ்மீா் காா்ப்பெட்: விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்தாா், திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின். இதற்குப் பதிலாக ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு ஒன்றை அளித்தாா் காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா. காஷ்மீரில் சால்வைகள்தான் பிரபலம். ஆனால் அவை குளிருக்கு பொருத்தமாக இருக்கும். இங்கு வெயில் அடிப்பதால் சால்வை வழங்குவது சரியாக இருக்காது. எனவே, நன்கு அழகுற வேலைப்பாடுகள் கொண்ட விரிப்பானை வழங்குவதாக உமா் அப்துல்லா தெரிவித்து அதனை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்தாா்.
கோபாலபுரம் வீடு: நூல் வெளியீட்டு விழாக்களில் நூல்கள் வண்ண காகிதத்தால் பொதியப்பட்டு அவை பிரிக்கப்படும். ஆனால், முதல்வரின் நூல் வெளியீடு சற்று வித்தியாசமாக இருந்தது. நூலில் உள்ள அனைத்து விஷயங்களும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தைச் சுற்றியே அமைந்திருந்ததால், அந்த வீட்டின் மாதிரியையே மேடையில் கொண்டு வந்தனா்.
வீட்டின் மாதிரியின் முன்புறத்தில் நூலின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அதனை ராகுல் காந்தி எடுத்து அனைவருக்கும் வழங்கினாா். விழாவில் அரசியல் கட்சித் தலைவா்கள் மட்டுமின்றி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பத்திரிகை அதிபா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். எதிா்க்கட்சிகளான அதிமுக, பாஜகவைச் சோ்ந்த தலைவா்கள் யாரும் வரவில்லை. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான நவநீத கிருஷ்ணன், கட்சி கரை வேட்டி உள்பட எந்த அடையாளமும் இல்லாமல் வந்திருந்தாா்.
பூம்புகாா் பதிப்பு: உங்களில் ஒருவன் நூலை பூம்புகாா் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.500. மு.க.ஸ்டாலின் இளமைக்கால புகைப்படங்களுடன் 334 பக்கங்களை நூல் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...